×

ரூ.1.5 லட்சத்துக்கு வாங்கியது அடிக்கடி பழுதானதால் ஆத்திரம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பெட்ரோல் ஊற்றி எரித்த டாக்டர்: ஆம்பூர் அருகே பரபரப்பு

ஆம்பூர்: ஆம்பூர் அருகே ரூ.1.5 லட்சத்துக்கு வாங்கிய ஓலா இ-ஸ்கூட்டர் அடிக்கடி பழுதாகி நின்றதால் ஆத்திரமடைந்த டாக்டர் ஸ்கூட்டரை தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சவுராஸ்டிரபுரத்தை சேர்ந்தவர் பிரித்திவிராஜ்(40). இவர் ஆம்பூர் பைபாஸ் சாலையில் பிசியோதெரபி கிளினிக் நடத்தி வருகிறார். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க விரும்பி பிரபல ஓலா நிறுவனத்தை ஆன்லைனில் அணுகி உள்ளார். அப்போது, கம்பெனி சார்பில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம் என்று ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் குறித்து கூறியுள்ளனர். இதை நம்பி பிரித்திவிராஜ் ரூ.1.5 லட்சத்துக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஓலா எஸ் 1- ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினார்.

ஆனால், கம்பெனி உறுதியளித்தபடி மைலேஜ் வரவில்லையாம். மேலும், ஸ்கூட்டரை வாகன பதிவு செய்யாமல் கம்பெனி அலைக்கழித்து வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், அடிக்கடி ஸ்கூட்டர் பழுதாக தொடங்கியுள்ளது. பலமுறை இதுகுறித்து கம்பெனியின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று வாகன பதிவு செய்ய, பிரித்திவிராஜை வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஆர்டிஓ அலுவலகத்துக்கு வரும்படி ஸ்கூட்டர்  கம்பெனியில் இருந்து தெரிவித்துள்ளனர். அதன்படி பிரித்திவிராஜ் ஆர்டிஓ அலுவலகம் சென்றார். அப்போது வாகனத்தின் உரிமையாளர் ஆம்பூரில் வசிப்பதால் அங்குதான் வாகன பதிவு செய்ய வேண்டுமென ஆர்டிஓ அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரித்திவிராஜ் ஸ்கூட்டர் கம்பெனிக்கு போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தும், உரிய பதில் அளிக்கவில்லையாம்.

இதனால், பிரித்திவிராஜ் விரக்தியுடன் ஆம்பூருக்கு திரும்பி கொண்டிருந்தார். இந்நிலையில் மேல்பட்டி அடுத்த லட்சுமியம்மாள்புரம் அருகே  வந்தபோது, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  திடீரென பழுதாகி நடுரோட்டில் நின்றது. பின்னர் ஸ்கூட்டரை தள்ளிச்சென்று சாலையோர மரத்தடியில் நிறுத்தினார். மேலும் சம்பந்தபட்ட கம்பெனி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போனில் புகார் தெரிவித்துள்ளார். அப்போது, ‘‘உடனடியாக சர்வீஸ் மேன்கள் வருவார்கள். உங்களது லோகேஷனை ஷேர் செய்யுங்கள்’’ என்று தெரிவித்துள்ளனர்.

அதன்படி அவர் லோகேஷனை ஷேர் செய்துவிட்டு காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை காத்திருந்துள்ளார். ஆனால் யாரும் வராததால் ஆத்திரமடைந்த பிரித்திவிராஜ், நண்பர்களுக்கு போன் செய்து பெட்ரோல் வாங்கி வரும்படி சொல்லி உள்ளார். அவரது நண்பர்கள் வாகனத்துக்கு போட பெட்ரோல் வாங்கி வரச்சொல்வதாக நினைத்து கேனில் பெட்ரோல் வாங்கி வந்தனர். சர்வீஸ் மேன்கள் வராததால் ஆத்திரத்தில் இருந்த பிரித்திவிராஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்  மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் தடுத்தனர். ஆனாலும் அவர் ஸ்கூட்டருக்கு தீ வைத்தார். இதில் ஸ்கூட்டர் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போது அவரது நண்பர்கள் ஸ்கூட்டர் எரிவதை வீடியோ எடுத்தனர். அந்த வீடியோ பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குப்பையை அள்ளிச் செல்லுங்கள்
டாக்டர் பிரித்திவிராஜ், எலக்ட்ரிக் ஓலா ஸ்கூட்டர் கம்பெனி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு பேசிய ஆடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில், ‘‘எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 கிலோ மீட்டர் பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், 40 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பயணிக்க முடிகிறது. மேலும் ஸ்கூட்டர் அடிக்கடி பழுதாகி நின்றதால் சரியான சேவை கிடைக்கவில்லை. பொதுமக்கள் யாரும் இதுபோன்று ஏமாறக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த ஸ்கூட்டரை தீ வைத்து எரித்துள்ளேன். நீங்கள் வந்து இந்த குப்பையை அள்ளிச் செல்லுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

Tags : Ola , Ola Electric Scooter, Petrol, Doctor,
× RELATED ஒலா டாக்ஸி நிறுவனத்தின் சி.இ.ஒ. ஹேமந்த் பஷி ராஜினாமா..!!