கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் ரேஷன் பொருள்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

பேரவையில் நேற்று டி.ஆர்.பி.ராஜா (திமுக): ரேஷன் கடைகளில் கைரேகையை வைத்து பொருட்கள் வழங்கும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில் கைரேகை பதிவில் சிக்கல்கள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். இந்த சிக்கலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி: பொது விநியோக திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள் உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும் என்பதற்காக, ஆதார் எண் மூலம் விரல் ரேகை பதிவு நடைமுறையில் பொருட்கள் வழங்கப்படுகிறது. அதன்படி, விரல் ரேகை சரி பார்க்கப்பட்டு பொருட்கள் பெறலாம். விரல் ரேகை சரி பார்க்கும் முறை வயோதிகம் முறை உள்ளிட்ட சில காரணங்களால் தோல்வி அடையும்பட்சத்தில், அவர்களுக்கு ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் மறுக்கப்படக்கூடாது. கைரேகை சரிபார்க்கும் பணியில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

எனவே வயது மூப்பு மற்றும் இதர காரணங்களால் கைரேகை சரிவர பதிவுற இயலாத இடங்களில் கண் கருவிழி சரிபார்ப்பு முறையில் நியாய விலை கடைகளில் உணவு பொருட்கள் வழங்கும் முறை மகாராஷ்டிரா, அசாம், தெலங்கானா, உ.பி. உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது. முதல்வரின் அறிவுரைப்படி கண் கருவிழி சரிபார்க்கும் முறை தமிழகத்தில் ஒரு சில நகர பகுதிகளில் செயல்படுத்தப்படும். தனிநபர் அடையாளம் உறுதி செய்யப்பட்டு நியாய விலை கடைகளில் உணவு பொருட்கள் வழங்கப்படும்.  இந்த முறையின் செயல்பாடு குறித்து நேரடியாக ஆய்வு செய்து, இந்த திட்டத்தை செம்மையாக்கி மாநிலம் முழுவதும் நியாய விலை கடைகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* பேரவையில் இன்று...

பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியதும், கேள்வி-பதில் நேரம் எடுத்துக் கொள்ளப்படும். இதையடுத்து நீதி நிர்வாகம், சிறைகள் மற்றம் சீர்திருத்த பணிகள், சட்டத்துறை, செய்தி மற்றும் செய்தி மற்றும் விளம்பரம், எழுது பொருள் மற்றும் அச்சுதுறை மீதான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். இறுதியில், விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர்கள் முறையே ரகுபதி, வெள்ளக்கோயில் சாமிநாதன் ஆகியோர் பதில் அளித்து பேசி, துறைக்கான முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

Related Stories: