வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்க 11 அரசு தொழிற்பயிற்சி நிலையம் பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு மகப்பேறு உதவித்தொகை உயர்வு: திருமண உதவித்தொகை ரூ.20,000; அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

சென்னை: பேரவையில் நேற்று மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் சி.வி.கணேசன் வெளியிட்ட அறிவிப்பு: இளைஞர்களின் வேலைவாய்ப்பு திறனை அதிகரிக்கும் பொருட்டு கடலூர் மாவட்டம் மங்களூர், மானாமதுரை, செய்யாறு, திருச்சுழி, கும்மிடிப்பூண்டி, ஒட்டன்சத்திரம், கடலாடி, அரூர், தேன்கனிக்கோட்டை, குன்னம், வால்பாறை ஆகிய 11 இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் ரூ.97.55 கோடி செலவில் துவக்கப்படும். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1 லட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

இணையதளம் வாயிலாக சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் எடைகள் மற்றும் அளவைகளை மின்னணு முத்திரையிடும் சட்டமுறை எடையளவு பிரிவு ரூ.59.37 லட்சம் செலவில் கணினிமயமாக்கப்படும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.1 லட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு நலத்திட்ட உதவி தொகை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித்தொகையான ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பினை வீட்டிலிருந்து சென்று படிப்பதற்கு ரூ.1000 மற்றும் விடுதியில் தங்கி படிப்பதற்கு ரூ.1,200 ஆகியவை ஆண்டிற்கு ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண நலத்திட்ட உதவித் தொகை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்கள் சேவை செயலி உருவாக்கப்படும்.

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நலத்திட்ட உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித்தொகை ஐடிஐ அல்லது பாலிடெக்னிக் படிப்பினை வீட்டிலிருந்து சென்று படிக்க ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஜீவா இல்லம் கூடுதல் படுக்கை வசதிகளுடன் ரூ.98.82 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.

Related Stories: