×

‘மன்னர் வகையறா’ படம் எடுக்க ரூ.5 கோடி கடன் வாங்கிய விவகாரம் சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது: நடிகர் விமல் கொடுத்த புகாரில் போலீஸ் நடவடிக்கை

சென்னை: ‘மன்னர் வகையறா’ படம் தயாரிக்கும்போது முறையாக கணக்கு காட்டாமல், போலி ஆவணம் மூலம் பணம் மோசடி செய்ததாக நடிகர் விமல் அளித்த புகாரில் சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலனை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில், 2021ம் ஆண்டு நடிகர் விமல் புகார் ஒன்று கொடுத்தார். அதில், ‘‘கடந்த 2016ம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கிய ‘மன்னர் வகையறா’ என்ற படத்தில் நடித்தேன். பண பிரச்னை காரணமாக அந்த படத்தை எனது ஏ3வி சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டேன்.

இந்த படத்தை முதலில் தயாரித்தது கணேஷ். அவரால் படத்தை தயாரிக்க முடியவில்லை என்பதால் அவர் விலகிவிட்டார். பிறகு சிங்காரவேலன், பைனான்சியர் கோபி என்பவரை அறிமுகம் செய்து, அவர் மூலம் படத்தை தயாரிக்க பணம் ஏற்பாடு செய்து தந்தார். அவர்களை நம்பி பல காசோலைகள் மற்றும் ஆவணங்களிலும் கையெழுத்திட்டேன். இந்நிலையில் படத்தை தயாரிக்க ரூ.3 கோடி செலவானதாகவும், அதனை விற்பனை செய்ததில் ரூ.4 கோடி கிடைத்ததாகவும் சிங்காரவேலன் தெரிவித்தார். அந்த ரூ.4 கோடி பணமும் படத்திற்காக கடனாக வாங்கிய ரூ.3 கோடிக்கு வட்டிக்காக செலவாகி விட்டதாகவும் சிங்காரவேலன் என்னிடம் தெரிவித்தார். அசல் ரூ.3 கோடி பணத்துக்காக எதிர் வரும் காலத்தில் படங்கள் நடித்து சம்பளத்தின் மூலம் கொடுத்தேன்.

இதனிடையே மன்னர் வகையறா படத்தை விற்றதில் ரூ.8 கோடி கிடைத்ததை மறைத்து பொய் கணக்கு மூலம் என்னை சிங்காரவேலன் மோசடி செய்து விட்டார். மேலும் தன் தயாரிப்பு நிறுவனத்தை தவறாக பயன்படுத்தி பல ஆவணங்கள் மற்றும் காசோலைகளில் கையெழுத்து வாங்கி பண மோசடி செய்துள்ளார். தயாரிப்பாளர் சிங்காரவேலன் செய்த மோசடிக்கு எனது பெயரை பயன்படுத்தியுள்ளார். அதற்கு உடந்தையாக கோபி மற்றும் விக்னேஷ், கண்ணன், திருநாவுக்கரசு ஆகியோர் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த புகாரின் மீது அப்போது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நடிகர் விமல் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மோசடி செய்த சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலன் உள்பட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிமன்றம் விசாரணை நடத்தி மோசடி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விருகம்பாக்கம் போலீசார் ஐபிசி 420 உள்ளிட்ட சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை. இதனால் சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலன் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றனர்.

இதற்கிடையே நடிகர் விமல் சினிமா தயாரிப்பாளர் கோபியிடம் ரூ.5 கோடி கடன் பெற்று மோசடி செய்ததாகவும், அதேபோல், தயாரிப்பாளர் சிங்காரவேலனும் ரூ.1.50 கோடி பணம் பெற்று மோசடி செய்துவிட்டார் என்று கமிஷனர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார் அளிக்கப்பட்டது. அதற்கு மறுப்பு தெரிவித்து நடிகர் விமல் கமிஷனர் அலுவலகத்தில் தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன் மற்றும் கோபி ஆகியோர் பொய் புகார் அளிப்பதாகவும், இந்த பணம் மோசடி குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் கூறி புகார் அளித்து சென்றார்.

இந்நிலையில், கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் அளித்த புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வடபழனி உதவி கமிஷனருக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி வடபழனி உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர் சினிமா தயாரிப்பாளர் சிங்காரவேலனை நேற்று காலை அவரது வீட்டில் கைது செய்தனர். பிறகு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சிங்காரவேலனிடம் ரூ.5 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Singaravelan ,Wimal , Filmmaker Singaravelan arrested for borrowing Rs 5 crore to shoot 'Mannar Vagaiyara': Police action on actor Wimal's complaint
× RELATED புழல் சுற்று வட்டார பகுதிகளில்...