மேலூர் நகரில் ஆக்கிரமிப்பில் முக்கிய சாலைகள்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மேலூர்: மேலூர் நகரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் நடைபாதை வியாபாரிகளின் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலூர் நகரில் செக்போஸ்ட் முதல் யூனியன் அலுவலகம் வரை மதுரை-மேலூர் மெயின் ரோடு 2 கி.மீ. தூரத்திற்கு அமைந்துள்ளது. இது செக்கடி என்னும் இடத்தில் மூன்றாக பிரிந்து சிவகங்கை சாலை, திருவாதவூர் சாலை என உள்ளது. இந்த முக்கியமான சாலைகள் அனைத்திலும் உள்ள கடைக்காரர்கள் பாகுபாடின்றி தங்கள் கடையின் முன்புறத்தை ஆக்கிரமித்துள்ளனர். இது போதாதென்று நடைபாதை கடை வியாபாரிகள் 100 அடி சாலையை 50 அடியாக குறைத்து கடைகளை பரப்பி உள்ளனர்.

இதனால் மிக குறுகிய அந்த சாலையிலேயே பஸ், கார், டூவீலர் போன்ற வாகனங்கள் மிகுந்த சிரமத்துடன் கடந்து செல்கின்றன. இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் அதிகளவு ஏற்படுகிறது. இவற்றை தவிர்க்க எண்ணி போக்குவரத்து போலீசார் கடந்த ஆண்டு, சாலையின் இருபுறமும் சாலை ஓரத்தில் தரையில் கயிறுகளை அமைத்தனர். சாலையில் நிறுத்தப்படும் டூவீலர்கள் இதற்குள் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கை குறைந்து போனதால், நடைபாதை கடைக்காரர்களே அந்த கயிறுகளை தாண்டி கடை போட்டு வருகின்றனர்.மேலூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து மேலூர் நகரில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு, நிரந்தர கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற முன் வர வேண்டும் என்பதே மேலூர் நகர் பொதுமக்களின் தற்போதைய கோரிக்கையாகும்.

Related Stories: