கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை கேரளாவில் முக கவசம் கட்டாயம் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிக்கவில்லை என்றாலும், முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்பட நிபந்தனைகளை அனைவரும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்து உள்ளார். இந்தியாவில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு கொரோனா பரவல் மெதுவாக அதிகரித்து வருகிறது. எனவே இது கொரோனாவின் 4வது கட்டமாக இருக்கலாமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் நிபந்தனைகளை கடுமையாக பின்பற்ற தீர்மானிக்கப்பட்டு உள்ளது. நோய் பரவல் அதிகரித்து உள்ள நிலையில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த தீர்மானித்து உள்ளார்.

கேரளாவில் கடந்த சில வாரங்களாக தினசரி நோயாளிகளின் எண்ணிக்கை 200க்கும் 300க்கும் இடையே உள்ளது. கடந்த 21ம் தேதி 315 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டது. நேற்று 225 பேருக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினார். இதில் தொற்று பரவல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு  அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியது: கேரளாவில் கொரோனா தொற்று அச்சப்படும்படி இல்லை. எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும் நோய் பரவல் சற்று அதிகரித்து உள்ளது தெரியவந்து உள்ளது. அங்கு தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் பரவல் தற்போது அதிகமாக இல்லை என்றாலும்  பொது இடங்களில் அனைவரும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்பட நிபந்தனைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: