பண்ருட்டி களத்துமேடு குளக்கரையில் இன்று 200 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்: நகராட்சி ஊழியர்கள் அதிரடி

பண்ருட்டி: கடலூர் மாவட்டம் பண்ருட்டி களத்துமேடு பகுதியில் உள்ள நீர் நிலைப்பகுதியை (குளம்) ஆக்கிரமித்து சுமார் 200 குடும்பங்கள் 50 வருடத்திற்கு மேலாக வசித்து வருகின்றன. புகார்களின் அடிப்படையில் இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் அரசாணை வழங்கியது. இதனையடுத்து நகராட்சி ஊழியர்கள், கடந்த 15 நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்பை அகற்ற சென்றனர். மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 15 நாள் அவகாசம் கொடுத்து மாற்று இடம் கேட்டனர். இந்த அவகாசம் முடிந்ததால் நகராட்சி ஊழியர்கள், 2 பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரம் மற்றும் அதிகாரிகளை சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பண்ருட்டி நகராட்சி  கமிஷனர் மகேஸ்வரி, தாசில்தார் சிவகார்த்திகேயன் ஆகியோருடன் பொதுமக்கள் சார்பாக பண்ருட்டி நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இதற்கிடையே இன்று காலை ஆக்கிரமிப்பு வீடுகள் கண்டிப்பாக அகற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததன் பேரில், பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளில் இருந்த பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருட்களை தாங்களாகவே எடுத்து வந்து தெருவில் வைத்து கொண்டு, ‘மாற்று இடம் இல்லாமல் நாங்கள் இனி எங்கு செல்வது, எங்கள் குழந்தைகளின் கதி என்னவாகும், எங்கள் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டதே’ என கூறி கண்ணீர் விட்டு அழுதனர். இதற்கிடையே அங்குள்ள 200க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை நகராட்சி ஊழியர்கள் 3 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இடித்து அகற்றினர். 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: