×

சென்னையை வீழ்த்தி பஞ்சாப் முன்னேற்றம் அர்ஷ்தீப் சிங், ரபாடா அருமையாக பந்துவீசினர்: கேப்டன் மயங்க் அகர்வால் பாராட்டு

மும்பை:ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த 38வது லீக் போட்டியில் சென்னை-பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரரான கேப்டன் மயங்க் அகர்வால் 18 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்பு ஜோடி சேர்ந்த தவான் மற்றும் பானுகா ராஜபக்சே சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.பானுகா 32 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார்.  மறுபுறம் தவான் கடைசி வரை அவுட் ஆகாமல் 59 பந்துகளில் 88 ரன்களை விளாசினார்.  கடைசியில் லிவிங்ஸ்டன் 7 பந்துகளில் 19 ரன்கள் அடிக்க பஞ்சாப் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சென்னை அணியின் ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. அதிரடி வீரர்  உத்தப்பா 1 ரன், சான்ட்னர் 9, சிவம்துபே 8 ரன் என அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.  ருதுராஜ் 27 பந்துகளில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடிய அம்பத்தி ராயுடு 39 பந்துகளில் 6 சிக்சர்களுடன் 78 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் டோனி சிக்சர் அடித்தார். மூன்றாவது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார். ஆனால் பந்து பேர்ஸ்டோவின் கையில் புகுந்தது. டோனி அவுட் ஆனார். 20 ஓவரில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

வெற்றிக்கு பின் பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் கூறுகையில், ‘‘டாசில் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இத்தொடரில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் டாசில் வென்றுள்ளோம். அர்ஷ்தீப் சிங் சிறப்பாக பந்துவீசினார். மிகச் சரியான தருணத்தில் மிட்செல் சான்ட்னரின் விக்கெட்டை வீழ்த்தினார். ரபாடாவும் தன் பங்கை சரியாக செய்தார். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அம்பத்திராயுடுவின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது. அர்ஷ்தீப் மற்றும் ரபாடா இருவருமே எங்கள் அணிக்கு கிரேட் பிளேயர்ஸ்தான். ஒரு அணியாக நாங்கள் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் வரிசையாக போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் இப்போது எங்களின் தேவை’’ என்று தெரிவித்தார்.

ஆட்டநாயகன் விருது பெற்ற துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கூறுகையில், ‘‘என்னுடைய பிட்னெஸ் மற்றும் என்னுடைய அணுகுமுறை. இவற்றில்தான் நான் எப்போதும் முழு கவனம் செலுத்துகிறேன்.
இதற்கான பலன் தானாக கிடைக்கும். ஆடுகளம் சற்று மந்தமாக இருந்தது. அடித்து ஆட விரும்பினேன். ஆனால் பந்தை சரியாக எதிர்கொள்வது சற்று கடினமாக இருந்தது. இருந்தாலும் நான் நிதானமாக இருந்தேன். செட் ஆகிவிட்டேன் என்று உணர்ந்தவுடன், பவுண்டரிகளை விளாச ஆரம்பித்தேன். முதலில் பேட் செய்தால், எதிரணியின் பவுலர்களுக்கு நெருக்கடி தர முடியும். அணியில் இப்போது நான் சீனியர் பிளேயர். அதனால் போட்டியின்போது அணிக்கு தேவையானதை, கேப்டன் விரும்புவதை நான் தரவேண்டும்’’ என்றார்.

துவக்கம் சரியில்லை
சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறுகையில், ‘‘நன்றாகத்தான் துவக்கினோம். ஆனால் கடைசி ஓவர்களில் கூடுதலாக 15 ரன்களை கொடுத்து விட்டோம். ராயுடு நன்றாக ஆடினார். ஆனால் நான் முதலிலேயே சொன்னது போல், 175 ரன்களுக்குள் பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். தவிர பேட்டிங்கிலும் எங்களுக்கு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. முதல் 6 ஓவர்களில் நாங்கள் சரியாக ஆடவில்லை.  அந்த பலவீனத்தை சரி செய்து, அடுத்த போட்டிகளில் சிறப்பாக ஆடுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’’ என்றார்.

Tags : Punjab ,Chennai ,Arshdeep Singh ,Rabada ,Mayang Agarwal , Chennai, Fall, Punjab Arshdeep Singh, Rabada
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து