அதிகரிக்கும் கொரோனா பரவல்: பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம்..கர்நாடக அரசு உத்தரவு..!!

பெங்களூரு: கொரோனா பரவல் மீண்டும் மெல்ல அதிகரித்து வருவதால் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூருவிலும் கொரோனா பாதிப்பு மெல்ல உயர்ந்து வருகிறது. இதையடுத்து கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பெங்களூருவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.

கர்நாடகாவில் கொரோனா 4வது அலை உருவாகாமல் தடுக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பொது இடங்களான ரயில், பேருந்து நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதைத்தவிர உள்அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யவில்லை. முகக்கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் கட்டாயமாகும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு அரசு பிறப்பிக்கும் உத்தரவுகளை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: