×

நிலத்தை உறவினர்கள் அபகரித்ததால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி-திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், நிலத்தை உறவினர்கள் அபகரித்ததால் அதிர்ச்சியடைந்து மூதாட்டி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று நடந்தது. அதில், டிஆர்ஓ பிரியதர்ஷினி, கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம், சுய தொழில் கடனுதவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த பெரியகிளாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி அன்னபூரணி(75), கோரிக்கை மனுவுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது, நுழைவு வாயிலில் பொதுமக்கள் கொண்டுவரும் பைகளை போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர்.அப்போது, மூதாட்டி அன்னபூரணி பிளாஸ்டிக் கேனில் கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். உடனடியாக, அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றினர்.

அதைத்தொடர்ந்து, மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில், தனது கணவர் லட்சுமணன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், அவரது செ்ாத்துக்களை தனக்கும், 3 மகள்களுக்கும் நான்கு பாகங்களாக பிரித்து உயில் எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும், தனக்கு உயில் எழுதிய பாகத்தை, கணவரின் உறவினர்கள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதால் வாழ்வாதாரம் இழந்து தீக்குளிக்க முயன்றதாக மூதாட்டி கண்ணீருடன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, மூதாட்டியிடம் இருந்து அதிகாரிகள் கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்துவதாக உறுதியளித்தனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.மேலும், செங்கம் தாலுகா வேப்பூர் செக்கடி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 20 பேர், ஏரி நீர்நிலை பகுதியில் உள்ள வீடுகளை அகற்றுவதற்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதை அரசு திரும்பப்பெற வேண்டும். வேறு வாழ்வாதாரம் இல்லாததால் வீடுகளை இடிக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.

அதேபோல், கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆங்குணம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 40 ஆண்டுகளாக குடியிருக்கும் தங்களுடைய வீடுகளுக்கு பட்டா வழங்கக்கோரியும், தொடர்ந்து பலமுறை வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தும் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர், கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர்.



Tags : Muthatti- ,Thiruvannamalay , Thiruvannamalai: At a public grievance meeting held in Thiruvannamalai yesterday, relatives were shocked by the land grab.
× RELATED சென்னை அண்ணா நகரில் மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த 3 பேர் கைது!!