ஜவ்வாதுமலை கிராமங்களில் பயிர்களை துவம்சம் செய்து ஒற்றை தந்த யானை அட்டகாசம் : 3 நாட்களாக தூக்கமின்றி தவிக்கும் மக்கள்

திருப்பத்தூர் : ஜவ்வாதுமலை கிராமங்களில் பயிர்களை துவம்சம் செய்து ஒற்றை தந்த யானை அட்டகாசம் செய்வதால், 3 நாட்களாக மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதியில் புதூர்நாடு, புங்கம்பட்டுநாடு, நெல்லிவாசல்நாடு உள்ளிட்ட 3 ஊராட்சிகளில்  32 கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம், கால்நடைகள் வளர்ப்பையும் நம்பி உள்ளனர்.

இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 7 யானைகள் சுற்றித்திரிந்தது. அந்த யானைகள் வனப்பகுதி வழியாக திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதிக்கு சென்றபோது, வனத்துறையால் பிடிக்கப்பட்டு, முதுமலை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனாலும் அவ்வப்போது ஒற்றை தந்த யானை ஒன்று கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கிராமங்களில் ஒற்றை தந்த யானை நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தூக்கமின்றி மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் நேற்று அந்த யானை புங்கம்பட்டுநாடு,  பெருமாள்புதூர் பகுதிகளில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்து கேழ்வரகு, சாமை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்துள்ளது.

இதனால் மலைகிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், மேளம் அடித்தும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அந்த யானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. ஆனாலும் மீண்டும் ஒற்றை தந்த யானை கிராமத்துக்குள் புகுந்துவிடுமா என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஒற்றை தந்த யானை கிராமங்களுக்கு வராதபடி நிரந்தர தீர்வு காண வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: