வேலூர் கோட்டை அகழியில் 7 கிலோ கட்லா சிக்கியது ஆண்டுக்கு 7 டன் மீன்கள் விற்பனை மூலம் அரசுக்கு ₹4.90 லட்சம் வருவாய்

*இறந்த மீன்களை உடனடியாக அகற்ற கோரிக்கை

வேலூர் : வேலூர் கோட்டை அகழியில் 7 கிலோ எடைகொண்ட கட்லா மீன் சிக்கியது. ஆண்டுக்கு 7 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ₹4.90 லட்சம் வருவாய் கிடைக்கிறது என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் கோட்டையை சுற்றிலும் 191 அடி அகலமும், 29 அடி ஆழமும் கொண்ட அகழி அமைந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ₹33 கோடி மதிப்பீட்டில் கோட்டையை சுற்றுலா பயணிகள் கவரும் வண்ணம் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. கோட்டையின் உட்புறம் நடைபாதை, குடிநீர் வசதி, கேன்டீன் வசதி, உணவருந்தும் வசதி, அலங்கார மின்விளக்குகள், ஒளி ஒலி அரங்கம், கோட்டை அகழியை தூர்வாருதல் என பல்வேறு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு அகழி தூர்வாருதல், கோட்டைக்குள் சாலைப்பணிகள், விளக்குத்தூண்கள் என ஒரு சில பணிகள் மட்டும் முடிவடைந்துள்ளது.

கோட்டை அகழி மீன்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அகழியில் மீன்கள் வளர்க்கப்பட்டு, பொதுமக்களுக்கு அரசு நிர்ணயம் செய்த விலையில் தினமும் விற்பனை செய்யப்படுகிறது. மீன்களை வாங்க தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதன்படி, ஆண்டுக்கு 7 டன் மீன்கள் விற்பனை செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அகழியில் இருந்து 5 அல்லது 5 டன்னுக்கு குறைவாக மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்தாண்டு 7 டன் மீன்கள் விற்பனை செய்து அரசுக்கு ₹4.90 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. மேலும் அகழியில் கடந்த ஆண்டுகளில் 8 கிலோ கட்லா மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 23ம் தேதி 7.2 கிலோ கட்லா மீன் பிடிக்கப்பட்டுள்ளது.  

இதற்கிடையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோட்டை அகழியில் மீன்கள் செத்து மதிக்கிறது. இதுகுறித்து தினகரனில் விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, கடந்த 22ம் தேதி மாநகராட்சி சார்பில் செத்து மிதந்த மீன்கள் அகற்றும் பணி தொடங்கியது. ஆனால் இறந்த மீன்கள் முழுவதுமாக அகற்றப்படவில்லை. இதனால் தற்போது, கோட்டை நுழைவு வாயிலின் இடம் புறம் உள்ள அகழியில் அதிகளவில் மீன்கள் செத்து மிதக்கிறது.

இதனால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே செத்து மிதக்கும் மீன்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அகழியில் மீன்கள் இறப்பு குறித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரனிடம் கேட்டபோது, ‘ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வெப்பம் காரணமாக ஜிலேபி வகை மீன்கள் இறந்து கிடக்கும். ஆனால், அகழியில் உள்ள கட்லா, கெண்டை மீன் உள்ளிட்ட மீன் வகைகள் நன்றாக வளர்ந்துள்ளது. அகழியில் இறந்து கிடக்கும் மீன்கள் அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: