தமிழ்நாட்டில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 6 மாத குழந்தை உள்பட மூவர் பரிதாப மரணம்..!!

சென்னை: தமிழ்நாட்டில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் ஒரு குழந்தை உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் மரணமடைந்தனர். முட்டத்துறை கூட்டு சாலை அருகே இந்த கோர விபத்து நிகழ்ந்தது. மதுரையை சேர்ந்த அஷ்வின் குமார் தமது குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அதிகாலையில் சொந்த ஊர் புறப்பட்டு சென்றார். அப்போது டேங்கர் லாரி மீது நிலைதடுமாறி கார் மோதியதில் அஷ்வின் குமார், அவரது 6 மாத ஆண் குழந்தை உயிரிழந்தனர். இந்த விபத்தில் மனைவி சுப பாக்கியம், 2 வயது மகள் திவானா படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், புதுச்சேரியில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் திருநள்ளாறு கோயிலுக்கு செல்வதற்கு வேனில் வந்துள்ளனர். கடலூர் சிப்காட் அடுத்த சோழஞ்சாவடி என்ற இடத்தில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆனந்த் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். வேனில் இருந்து 3 குழந்தைகள் உட்பட 14க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேன் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

Related Stories: