×

வாடகை கட்டடம் வேண்டாம்!: ரூ.8.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: ரூ.8.14 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை கட்டடங்களை திறந்து வைத்து, 5 புதிய பதிவு மாவட்டங்களை தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில்  8 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 வணிகவரி அலுவலகக் கட்டடங்கள், 4 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.  

மாநிலத்தின் வரி வருவாயில் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் பங்களிக்கும் முக்கிய துறையாக வணிகவரித்துறை விளங்கி வருவதோடு, வரி வசூல் மற்றும் வரி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனையும் உறுதி செய்து வருகிறது. மேலும், பதிவுத்துறை வாயிலாக மக்கள் தங்கள் சொத்துக்களின் மீதான உரிமையை தமது பெயரில் பதிவு செய்தல், திருமணத்தைப் பதிவு செய்தல், சங்கங்கள், சீட்டுகள் மற்றும் கூட்டாண்மை நிறுவனம் போன்ற குழுவாகக் கூடி செயல்படும் நடவடிக்கைகளைப் பதிவு செய்தல் போன்ற  பணிகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை  செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், வணிகவரித் துறை சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் 75 லட்சம் ரூபாய் செலவிலும், தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் 1 கோடியே 19 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள வணிகவரி அலுவலகக் கட்டடங்கள்;  பதிவுத் துறை சார்பில் பாளையங்கோட்டை பதிவு மாவட்டம் - நாசரேத், விருதுநகர் பதிவு மாவட்டம் - வீரசோழன், கும்பகோணம் பதிவு மாவட்டம் - நாச்சியார்கோயில், பட்டுக்கோட்டை பதிவு மாவட்டம் - உள்ளிக்கோட்டை ஆகிய இடங்களில் 4 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 சார் பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள்; காரைக்குடியில் 2 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கட்டடம்; என மொத்தம் 8 கோடியே 14 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வணிகவரி மற்றும் பதிவுத் துறை கட்டடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்.  

2021-2022-ஆம் ஆண்டுக்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கையில், திருவாரூர், திருவள்ளூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மற்றும் பெரம்பலூர் ஆகிய வருவாய் மாவட்டங்களின் தலைமையிடங்களில் புதிய பதிவு மாவட்டங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இவ்விடங்களில் உருவாக்கப்பட்டுள்ள புதிய பதிவு மாவட்டங்களை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, கூடுதல் தலைமைச் செயலாளர்/வணிகவரி ஆணையர் திரு. க.பணீந்திர ரெட்டி, இ.ஆ.ப., வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் திருமதி பா.ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப.,  பதிவுத்துறைத் தலைவர் திரு. ம.ப.சிவன்அருள், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Commercial Tax and Registration Buildings , Rs 8.14 crore, Commercial Tax, Registry Building, MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...