குன்றத்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்: அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை: சென்னை புறநகர் பகுதியில் உள்ள பழமையான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க குன்றத்தூர் முருகன் கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. இதில், அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, தாம்பரம் காவல் ஆணையரக கமிஷனர் ரவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக கடந்த 20ம் தேதி முதல் கணபதி, நவக்கிரக, மகாலட்சுமி ஹோமங்கள், யாகசாலை என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, சோம கும்ப பூஜை, பச்சை சாத்துபடி, ஆறாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், சிவஞான பாலசுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயில் ராஜகோபுர கலசங்கள் மற்றும் கோயில் விமானங்களுக்கு புனிதநீர் கொண்டு கும்பாபிஷேகம் செய்தனர். மேலும் விநாயகர், தட்சிணாமூர்த்தி மற்றும் முருகப்பெருமான் சன்னதி கோபுரங்களில் கும்பாபிஷேகம் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகம் செய்த புனித நீர் டிரோன் மூலம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு வள்ளி, தெய்வானை முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவமும், தீபாராதனையும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சாமி வீதியுலா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை பக்தர்கள் காணும் வகையில் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. குன்றத்தூருக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும், அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் விழாக்குழு தலைவர் அ.செந்தாமரை கண்ணன், குன்றத்தூர் நகரமன்ற தலைவர் கோ.சத்தியமூர்த்தி, கோயில் நிர்வாக அதிகாரி மா.அமுதா, உதவி ஆணையர் முத்துரெத்தினவேலு மற்றும் விழா குழுவை சேர்ந்த வி.ஆர்.வெங்கடாசலம், வெங்கடேசன், தனசேகரன், பக்தவத்சலம், குணசேகர், ஜெயக்குமார், தி.வே.சரவணன், கார்த்திகேயன், சங்கீதா கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: