சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள் நீக்கம்: வைகோ கடும் கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  வெளியிட்ட அறிக்கை: சிபிஎஸ்இ 11 மற்றும் 12ம் வகுப்புக்கான வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து பனிப்போர் யுகம், ஆப்பிரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற் புரட்சி ஆகிய பாடங்களை நீக்கி உள்ளது. ஃபயஸ் அகமது என்ற உருதுக் கவிஞரின் இரண்டு கவிதைகள், மதம்-வகுப்பு வாதம் மற்றும் அரசியல்-வகுப்புவாதம், மதச்சார்பு அற்ற அரசு என்ற பிரிவில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இடம் பெற்று இருந்த பாடங்களையும், ஜனநாயகம், பன்முகத்தன்மை ஆகிய பாடங்களையும் நீக்கி விட்டனர்.

தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் பரிந்துரையின்படி, இந்தப் பாடங்கள் வரும் கல்வி ஆண்டு (2022-23) முதல் நீக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்து இருக்கின்றது.கடந்த கல்வி ஆண்டில், 11ம் வகுப்பு அரசியல் சமூக அறிவியல் பாடங்களில் இருந்து கூட்டு ஆட்சி, குடி உரிமை, தேசியவாதம் மற்றும் மதச் சார்பு இன்மை போன்ற பாடங்களை நீக்கினார்கள். ஜெர்மனிய ஹிட்லர் அரசும், இத்தாலியின் முசோலினி அரசும் இப்படித்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்வதற்கு, பாடத் திட்டங்களில் பாசிச நச்சுக் கருத்துகளைத் திணித்தார்கள். ஆனால் அந்த அரசுகள், வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டன என்பதை மறந்து விடக் கூடாது. அதுபோல, பா.ஜ அரசின் வரலாற்றுத் திரிபு வேலைகள் வெற்றி பெறாது.  எனவே, வரலாற்றுப் பாடங்களை நீக்குவதையும், இருட்டடிப்புச் செய்வதையும், இந்துத்துவக் கருத்துகளைத் திணிப்பதையும் பா.ஜ அரசு கைவிட வேண்டும்.

Related Stories: