×

மின்சார ரயில் விபத்துக்குள்ளான விவகாரம் ரயில் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு: எழும்பூர் ரயில்வே போலீசார் நடவடிக்கை

சென்னை : மின்சார ரயில் விபத்துக்குள்ளான விவகாரத்தில், அதன் ஓட்டுநர் மீது 3 பிரிவுகளின் கீழ் எழும்பூர் ரயில்வே காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில், 1வது நடைமேடை உடைத்துக் கொண்டு, அங்கிருந்த கடைகளின் மோதிய பிறகு நின்றது. பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதையடுத்து விபத்துக்குள்ளான ரயிலை மீட்பு குழுவினர் சுமார் 9 மணி நேரத்துக்கு பிறகு மீட்டனர். ரயிலின் முதல் இரண்டு பெட்டிக்கு மட்டுமே சேதம் என்பதால் மீதியுள்ள பெட்டியை நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் மீட்டு பணிமனைக்கு இழுத்துச் ெசன்றனர்.

தற்போது, விபத்துக்குள்ளான 1வது பிளாட்பார்மில் 100 மீட்டர் தொலைவில் இருந்து  வழக்கம் போல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக கடற்கரை ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் துக்காராம் அளித்த புகாரின் அடிப்படையில் எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் இளவரசன், ஆபத்தை உண்டாக்கும் வகையில் வாகனங்களை இயக்குதல், பிறரின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்குதல், அதிவேகமாக வாகனத்தை இயக்கியது என்ற பிரிவின்கீழ் ரயிலை ஓட்டி வந்த லோகோ பைலட் பவித்ரன் மீது இந்திய தண்டனை சட்டம் 279 மற்றும் ரயில்வே சட்டப்பிரிவு 151, 154 உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தார். மேலும்,விபத்து குறித்து விசாரணை நடத்த சென்னை கோட்ட ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Electric train accident case: Train driver charged under 3 sections: Egmore Railway Police action
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13% மாணவ, மாணவியர் தேர்ச்சி: 56 பேர் 100/100