தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வெளிநாட்டு மரம் அகற்றும் பணி சேர்க்கவில்லை: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு தகவல்

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட சட்டத்தின்படி காடு வளர்ப்பு திட்டங்கள் சேர்க்கப்பட்டு இருந்தாலும்கூட, வனப்பகுதிகளில் உள்ள வெளிநாட்டு மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகள் சேர்க்கப்படவில்லை என்று ஒன்றிய அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேலம் உள்ளிட்ட அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு தொடர்ச்சி மலையில் வளர்ந்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்த முடியாது என்று ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், மேற்கு தொடர்ச்சி மலையில் அன்னிய மரங்களை அகற்ற மலைவாழ் மக்களை பயன்படுத்தலாம். அன்னிய மரங்களை அகற்ற வேலை உறுதி திட்ட நிதியை பயன்படுத்தலாமா என்பது குறித்து ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட சட்டத்தின்படி காடு வளர்ப்பு திட்டங்கள் சேர்க்கப்பட்டு இருந்தாலும் வனப்பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான பணிகள் சேர்க்கப்படாததால் அந்த நிதியை பயன்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Related Stories: