×

மார்வாடி பெண் கொலை வழக்கில் திருப்பம் அடித்து உதைத்து துன்புறுத்தியதால் மாமியாரை கொன்றேன்: மருமகள் பகீர் வாக்குமூலம்; 2 பேருக்கு வலை

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் மார்வாடி பெண் கொலையில், தொடர்ந்து அடித்து உதைத்து துன்புறுத்தியதால் மருமகளே உறவினர்களுடன் சேர்ந்து மாமியாரை கழுத்தை அறுத்து கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதுதொடர்பாக, பீகாரை சேர்ந்த 2 பேரை, போலீசார் தேடி வருகின்றனர். திருக்கழுக்குன்றம் மேட்டு தெருவை சேர்ந்தவர் பத்தே சந்த் (78). திருக்கழுக்குன்றம் பஜார் வீதியில் அடகுக்கடை வைத்துள்ளார். இவரது மனைவி பிரேம் கன்வர் (70).

இவர்களது மூத்த மகன் கணபதி லால் (51), குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். 2, 3வது மகன்கள் சுனில் லால் (47), பிண்டுகுமார் (44) ஆகியோருக்கு திருமணமாகி, அதே பகுதியில் வசிக்கின்றனர். கடைசி மகன் கமலேஷ்குமார் (40) பெற்றோருடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் காலை பத்தே சந்த், மகன்கள் சுனில் லால், பிண்டுகுமார் ஆகியோர் கடைக்கு சென்றனர். பிரேம் கன்வர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரவு 7 மணியளவில் பத்தே சந்த் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முதல் தளத்தில் உள்ள அறையில் பிரேம் கன்வர் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக கிடந்தார்.

புகாரின்படி திருக்கழுக்குன்றம் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, 3வது மகன் பிண்டுகுமாரின் மனைவி சுஜாதா (27), காலில் காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது தெரிந்தது. போலீசார், அங்கு சென்று விசாரித்தனர். அதில், சிலர் தங்களது வீட்டுக்குள் புகுந்து என்னை அடித்து போட்டு விட்டு, மாமியார் பிரேம் கன்வரை கொலை செய்துவிட்டு தப்பினர் என கூறினார். அதற்கு போலீசார், சமீபத்தில் உங்கள் வீட்டுக்கு வந்த உறவினர்கள் எங்கே என கேட்டனர். ஆனால் அவர், முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அதில், நான்தான், மாமியார் பிரேம் கன்வரை கொலை செய்தேன் என சுஜாதா ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவரை, காவல் நிலையம் அழைத்து சென்று, கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், எங்களது குடும்பத்தில் 2 மூத்த மருமகள்கள் மீது, என் மாமியார் பிரேம் கன்வர் பாசம் காட்டுவார். என் மீது கோபப்படுவார். காரணம், அவர்கள் அனைவரும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள், நான் பீகாரை சேர்ந்தவள். மேலும், மார்வடியில் வேறு பிரிவை சேர்ந்தவள். என் குடும்பம் மிகவும் ஏழை குடும்பம் என்பதால் மாமியார் பாரபட்சம் காட்டினார். இந்தவேளையில், மூத்த மருமகள், தனியாக அவரது கணவருடன் சென்னைக்கு சென்று விட்டார். அதன் பிறகு எனக்கும், மாமியாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சில நேரத்தில் என்னை அடித்து துன்புறுத்துவார். நான் அனைத்தையும் பொறுத்து கொண்டேன். அவரது சித்திரவதை நாளுக்கு நாள் அதிகரித்தது. அதனால், அவரை பலமுறை கொலை செய்ய திட்டமிட்டேன். இதுபற்றி, பீகாரில் வசிக்கும் எனது மாமா மகன்கள் சுமித், தீபக் ஆகியோரிடம் தெரிவித்தேன். அவர்களுடன், பிரேம் கன்வரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி சுமித், தீபக் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன் எனது வீட்டுக்கு வந்தனர். அவர்களை வேறு இடத்தில் தங்க வைத்தேன்.

பின்னர், திட்டமிட்டபடி வீட்டில் யாரும் இல்லாதபோது, சுமித், தீபக் ஆகியோரை வரவழைத்து பிரேம் கன்வரின் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தோம். பின்னர், வீட்டின் மாடிக்கு சென்று தப்பிக்க நினைத்தோம். அவர்கள், எங்களது வீட்டின் மாடியில் இருந்து பக்கத்து மாடிக்கு தாவி குதித்தனர். நான் குதிக்க முயன்றபோது தவறி கீழே விழுந்தேன். அதனால் காலில் அடிப்பட்டது. இதையடுத்து, கொலையை மறைப்பதற்காக, மர்மநபர்கள் எனது மாமியாரை கொலை செய்து விட்டு, என்னையும் தாக்கியதாக என்று கூறினேன் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள, 2 பேரை தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : Pakir , I killed my mother-in-law for kicking and torturing a Marwari woman in a murder case: Confession of daughter-in-law Pakir; Web for 2 people
× RELATED இந்தியாவில் இருந்தே நியூசி.க்கு மிரட்டல்: பாக். அமைச்சர் பகீர் புகார்