×

இஸ்தான்புல் ஓபன் அனஸ்டேசியா சாம்பியன்

இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா போட்டபோவா சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் சக வீராங்கனை வெரோனிகா குதெர்மெதோவாவுடன் (25 வயது, 29வது ரேங்க்) மோதிய அனஸ்டேசியா (21வயது, 122வது ரேங்க்) 6-3, 6-1 என நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 23 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அனஸ்டேசியா முதல் முறையாக டபுள்யு.டி.ஏ தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியால் அவர் 44 இடங்கள் முன்னேறி 78வது இடத்தை பிடித்துள்ளார். வெரோனிகா 4 இடங்கள் முன்னேறி 25வது இடத்தை எட்டியுள்ளார்.

பார்சிலோனா ஓபன்: ஸ்பெயினில் நடந்த பார்சிலோனா ஓபன் பைனலில் உள்ளூர் நட்சத்திரங்கள் கார்லோஸ் அல்கரஸ் (18 வயது, 11வது ரேங்க்), பாப்லோ கரெனோ பஸ்டா (30 வயது, 19வது ரேங்க்) மோதினர். 1 மணி, 5 நிமிடங்கள் மட்டுமே நீடித்த ஆட்டத்தில்  கார்லோஸ் 6-3, 6-2 என நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டார்.

செர்பியா ஓபன்: பெல்கிரேடில் நடந்த செர்பியா ஓபன் பைனலில் நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா), 8ம் நிலை வீரர் ஆந்த்ரே ருப்லேவ் (ரஷ்யா) மோதினர். இப்போட்டியில் ருப்லேவ் 6-2, 6-7 (4-7), 6-0 என்ற  செட்களில்  வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 29 நிமிடத்துக்கு நீடித்தது.

Tags : Istanbul Open Anesthesia , Istanbul Open Anesthesia Champion
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!.