×

கூடங்குளம் அணுக்கழிவு கையாளுதல் தற்போதுள்ள நிலை தொடர வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக சுந்தர் ராஜன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணு உற்பத்தி ஆலையின் கழிவுகளை பாதுகாப்பது தொடர்பாக 2 வாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய அணு சக்தி கழகம் தாக்கல் செய்த இடைக்கால மனுவில், ‘கூடங்குளம் அணு உற்பத்தி மையத்தில் உள்ள அணுக் கழிவுகளை பாதுகாப்பது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வரும் 2024ம் ஆண்டு வரையில் அவகாசம் வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், ‘‘ஒவ்வொரு முறையும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் அணு சக்தி கழகத்தின் தரப்பில் அவகாசம் கேட்கப்படுகிறது. அதனை நிராகரிக்க வேண்டும்’’ என தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி கன்வீல்கர், ‘‘வழக்கை மே 4ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அதற்குள் எதிர்மனுதாரர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த இடைப்பட்ட காலம் வரையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் கழிவுகளை கையாளுவதில் தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும். அதில் எந்த மாற்றமும் கிடையாது’’ என உத்தரவிட்டனர்.

Tags : Supreme Court , Koodankulam access handling should continue as it is: Supreme Court order
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...