2024 மக்களவை தேர்தலை குறிவைத்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அதிகாரம் கொண்ட செயல் குழு: கட்சி தலைமை அறிவிப்பு

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள, கட்சியை வலுப்படுத்த காங்கிரசில் அதிகாரம் மிக்க செயல்குழு உருவாக்கப்படும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல், அதன் பிறகு நடந்த பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் தோல்வியாலும் காங்கிரஸ் கட்சி பல நெருக்கடிக்களுக்கு உள்ளானது.

இதனிடையே, கட்சியில் தேவையான மாற்றங்களை செய்யவும், வரும் 2024ம் ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தல் மற்றும் அடுத்தடுத்து நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களை சந்திக்க கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் காங்கிரஸ் தலைமைக்கு ஆலோசனை வழங்க தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், கட்சி தலைவர் சோனியா காந்தியை 3 முறை சந்தித்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர இருப்பதாகவும் கூறப்பட்டது. பிரசாந்த் கிஷோர் வழங்கிய பரிந்துரைகள் குறித்து ஆலோசிக்க மூத்த தலைவர்கள் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழு பிரசாந்த் கிஷோரின் பரிந்துரைக்கு ஆதரவாக சோனியா காந்தியிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அறிக்கை அளித்தது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த அதிகாரம் கொண்ட செயல் குழு அமைக்கப்பட இருப்பதாக கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நேற்று தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், ``கட்சி எதிர்கொண்டுள்ள உள்கட்சி பூசல் குறித்து தலைவர் சோனியா காந்தி மூத்த தலைவர்களுடன் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடக்கும் கருத்தாய்வு கூட்டத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். பிரசாந்த் கிஷோர் அளித்த திட்டம் குறித்து, கட்சியை வலுப்படுத்த அதிகாரம் கொண்ட செயற்குழு உருவாக்குவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அக்குழு நியமிக்கப்பட்ட பின்னர் அதில் யார் இடம் பெற்றுள்ளனர் என்பது குறித்து தெரிய வரும்,’’ என்று கூறினார். காங்கிரசில் எடுக்கப்படும் அதிரடி மாற்றங்கள், பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைவாரா? அவரது தேர்தல் உத்திகள் காங்கிரசை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லுமா? என்ற பல்வேறு ஊகங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* அடுத்த மாதம் கருத்தாய்வு கூட்டம்

அடுத்த மாதம் 13ம் தேதி  முதல் 15ம் தேதி வரை உதய்பூரில் நடக்க உள்ள கருத்தாய்வு கூட்டத்தில் (சிந்தன் ஷிவிர்), நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரம், சமுதாயம், நாடு எதிர்கொண்டுள்ள முக்கிய பிரச்சனைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்படும். மேலும், விவசாயிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பெண்களுக்கான சமூக நீதி பற்றி ஆலோசனை நடத்தப்படும். இதில், ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் 400 பேர் கலந்துகொள்வார்கள். இந்த கருத்தரங்கில் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றுவார் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: