மாணவர்களை பன்முக திறமைசாலிகளாக உருவாக்க புதிய செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும்: பல்கலை துணைவேந்தர்கள் மாநாட்டில் கவர்னர் பேச்சு

ஊட்டி: மாணவர்களை பன்முக திறமைசாலிகளாக உருவாக்க, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் புதிய செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும் என ஊட்டியில் நடந்த பதுணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக கவர்னர் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்ற இரு நாள் மாநாடு ஊட்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் நேற்று துவங்கியது. தமிழக கவர்னரின் தலைமைச் செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டில் வரவேற்றார். பல்கலைக்கழகங்களின் மானியக் குழு தலைவர் ஜெகதீஷ் சிறப்புரையாற்றினார்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் சுதந்திரத்திற்கு முந்தைய கல்வி முறை அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இருந்தது. தற்போது நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இந்தியா வரும் 2047ல் சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க, கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஈடுபட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. நம்மை அச்சுறுத்தி வந்த நாடுகள் கூட தற்போது நம்மைக் கண்டு அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு உதாரணம், உக்ரைன் - ரஷ்யா போரில் எந்த நாட்டிற்கும் இந்தியா அடிபணியாமல் சுதந்திரமாக முடிவை எடுத்தது.

இந்திய அளவில் 70 சதவீத மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களையே படித்து வருகின்றனர். மாணவர்கள் கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும்போது திறமையானவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களிடத்தில் பன்முக திறமையை உருவாக்க பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பாடுபட வேண்டும். இந்தியாவை முதன்மை நாடாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பல்கலைக்கழகங்கள் பன்முக திறன் கொண்ட மாணவர்களை உருவாக்குவது கடமை. அதற்கான வாய்ப்புகளை,செயல்திட்டங்களை பல்கலைக்கழகங்கள் கட்டமைக்க வேண்டும்.

பிரதமர்  மோடி தலைமையின் கீழ் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தற்சார்பு  கொண்ட நாடாக மாறி வருகிறது. ஒவ்வொரு குடிமகனையும் உள்ளடக்கிய வளர்ச்சி  என்பதே அரசின் நிலைப்பாடு. அரசின் அனைத்து நலத்திட்டங்களும் ஒவ்வொரு  குடிமகனுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இரு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் ஏராளமான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் மற்றும் துணை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: