400 பொறியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு பயிற்சி: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சென்னை, கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை பயிற்சி வளாகத்தில் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு பயிற்சியை அமைச்சர் எ.வ.வேலு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: ‘சாலைப் பாதுகாப்பே உயிர் பாதுகாப்பு’ என்பதால், சாலைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 400 பொறியாளர்களுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில், தற்போது வரை 202 பொறியாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சி மையத்திற்கு நிபுணர்கள் அடங்கிய ஒரு வழிகாட்டும் குழு அமைக்கப்படுகிறது.

அந்தக்குழுவில், அரசு முதன்மைச் செயலாளர், முதன்மை இயக்குநர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், முதன்மை இயக்குநர், சாலை மேம்பாட்டுத் திட்டம், சிறந்த ஆராய்ச்சி நிலையங்களின் பிரதிநிதிகளும், கட்டுமானத் தொழில் நிறுவனங்களின் மூத்த பொறியாளர்களும் இடம் பெற்றிருப்பார்கள். 40 பொறியாளர்கள் பங்கு பெறும் இந்த பயிற்சியில் சாலை அமைப்பதில் உள்ள வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, தரக்கட்டுப்பாடு போன்ற கூறுகளை விரிவாக பொறியாளர்களுக்கு பயிற்றுவிக்கப்படும். இந்த ஆண்டு முதல் 5 ஆண்டுகளுக்கு இத்துறையில் பணியாற்றும் பொறியாளர்களுக்கும், அலுவலர்களுக்கும் பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த அனைத்து பொறியாளர்களும் இப்பயிற்சியைப் பெற்று துறையின் பெருமைகளை உயர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: