இடுக்கியில் இன்று அதிகாலை பரிதாபம் தீயில் கருகி தம்பதி பலி: மகள் சீரியஸ்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கியில் இன்று அதிகாலை வீட்டில் தீப்பிடித்து தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவி 2 பேரும் தீயில் கருகி பரிதாபமாக இறந்தனர். அவர்களது ஒரே மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கேரள மாநிலம் இடுக்கி புற்றடி பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன் (50). அவரது மனைவி உஷா (45). இந்த தம்பதிக்கு ஸ்ரீதன்யா (18) என்ற மகள் உண்டு. நேற்று இரவு 3 பேரும் வழக்கம்போல் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் வீட்டில் தீ எரிவதை பார்த்த பக்கத்து வீட்டினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பின்னர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

அப்போது 3 பேரும் தீயில் கருகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே 3 பேரும் இடுக்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ரவீந்திரனும், உஷாவும்  பரிதாபமாக உயிரிழந்தனர். மகள் ஸ்ரீதன்யாவின் உடல் நிலை மோசமாக இருந்தது. ஆகவே மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவரது உடலில் 90 சதவீதத்திற்கும் மேல் தீக்காயங்கள் இருப்பதால் உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். இந்த தகவல் அறிந்ததும் இடுக்கி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மின் கசிவு தான் தீ விபத்திற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வீட்டில் தீ பிடித்து கணவன், மனைவி இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: