தமிழக-கர்நாடக மலைப்பாதையில் மரத்தில் ஏறி படுத்திருந்த சிறுத்தை: பயணிகள் அதிர்ச்சி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தமிழக, கர்நாடக மலைப்பாதையில் மரத்தின் மீது சிறுத்தை படுத்திருந்ததால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன. தமிழகம், கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சாலையாக திண்டுக்கல்- பெங்களூரு சாலை உள்ளது. இதில், 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. வனவிலங்குகள் அடிக்கடி வாகன விபத்தில் பலியானதை அடுத்து இந்த பகுதியில் இரவு நேர போக்குவரத்துக்கு அண்மையில் கோர்ட் தடை விதித்தது. இதனால் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இந்த மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இரவு நேர வாகன தடையால் வனவிலங்குகள் சாலை மற்றும் சாலையோரங்களில் ஹாயாக உலா வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு அரசு பஸ் ஒன்று சென்றது. 17வது கொண்டை ஊசி வளைவில் பஸ் திரும்பியபோது அங்குள்ள மரத்தில் சிறுத்தை ஒன்று படுத்திருந்தது.  இதைப்பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் செல்போனில் சிறுத்தையை வீடியோ எடுத்தனர். பஸ்சின் முகப்பு வெளிச்சம் சிறுத்தையின் கண்ணில் பளிச்சென்று அடித்தது. இதனையடுத்து, மெதுவாக எழுந்த சிறுத்தை மரத்தில் இருந்து கீழே குதித்து வனத்துக்குள் ஓடி மறைந்தது. பயணிகள் எடுத்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories: