×

இன்று அதிகாலையில் பரபரப்பு நாகர்கோவிலில் ஜவுளி கடையில் பயங்கர தீ: பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்

நாகர்கோவில்:  நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் ஜவுளி கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானது. நாகர்கோவில் செட்டிகுளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் லிஜின் (30). பீச் ரோடு ஜங்ஷன் பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இன்று அதிகாலை கடையில் இருந்து புகை வந்து கொண்டு இருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் லிஜினுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது கடைக்குள் பயங்கரமாக தீ எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து கடையின் ஷட்டரை உடைத்து கடையை திறந்தனர். மேலும் வெளிப்புற ஜன்னல் கண்ணாடிகளையும் உடைத்து தீயை  அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த ஜவுளி கடை தரை தளம் மற்றும்  இரு தளங்களை ெகாண்ட கட்டிடம் ஆகும்.

தரை தளத்தில் ஜவுளி கடை உள்ளது. முதல் தளத்தில் தனியார் வங்கி உள்ளது. இதையடுத்து அந்த வங்கி அலுவலகத்தையும் திறந்து தீ பரவி உள்ளதா? என ஆய்வு செய்தனர். ஆனால் அங்கு எந்த சேதமும் இல்லை. இந்த தீ விபத்தில் ஜவுளி கடையில் இருந்த துணிமணிகள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு உடனடியாக தெரிய வில்லை.  பல லட்ச ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்ததாக கூறப்படுகிறது. தீ விபத்து குறித்து அறிந்ததும் கோட்டார் போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து நடந்து இருக்குமா? அல்லது வேறு காரணங்கள் இருக்குமா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதிகாலை 3 மணியளவில் புகை வந்ததாக கூறப்படுகிறது.  தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது.

ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் அந்த பகுதியில் திரண்டு இருந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தீ விபத்து நடந்த ஜவுளி கடையை மேயர் மகேஷ் இன்று காலை பார்வையிட்டார். அவருடன் துணை மேயர் மேரி பிரின்சி உள்பட மாநகராட்சி அலுவலர்கள், திமுகவினர் சென்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து கடை உரிமையாளரிடம் மேயர் மகேஷ் கேட்டறிந்தார்.

Tags : Nagercoil , Early morning, Nagercoil, textile shop, fire
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு