×

புதுகையில் மன்னர் கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த ஆயிப்பட்டி கிராம எல்லையில் சாலையோரமாக இடிந்த நிலையில் உள்ள தொண்டைமான் காலத்தைய சத்திரத்தில் 2 மன்னர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லறிவியல் துறை ஆய்வாளரும், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனருமான மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது: புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல வழித்தடங்களில் சத்திரங்களை ஏற்படுத்தியவர் என்ற புகழுடைய மன்னர் விஜய ரகுநாத தொண்டைமானாவார். கல்லாக்கோட்டை, அம்புக்கோவில் ஊர்களுக்கு செல்வதற்கான முக்கிய சாலையாக ஆயிப்பட்டி சாலை இருந்ததையும், அதனால் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இவ்வழியில் சத்திரம் கட்டியுள்ளது தெரியவருகிறது.

விஜய ரகுநாத தொண்டைமான் தர்ம நோக்கோடு வழிப்போக்கர், கால்நடைகள் இளைப்பாறுவதற்காக தனது தாயார் பெரிய ஆயி நல்ல காத்த அம்மாள் பெயரில் இந்த சத்திரத்தை கட்டியுள்ளது “ பெரிய ஆயி நல்ல காத்த அம்மாள் அவர்கள் சத்திரம்” என்ற கல்வெட்டு கிழக்கு வாயிற் நிலைத்தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுக்கு எதிரே உள்ள மேற்குப்புற வாயிற் நிலைத்தூணில் “சாற்வரி வருஷம் தயி (தை) மீ (மாதம்) 13ல் விசைய ரகுனாத தொண்டைமானாராவர்கள் தர்மம்’’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது 1781ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதியன்று இச்சத்திரம் விஜய ரகுநாத தொண்டைமானால் திறக்கப்பட்டதை குறிக்கிறது. ஆயிப்பட்டி கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெரிய ஆயி நல்ல காத்த அம்மாள் சத்திரம் அமைந்திருப்பதன் மூலம் ரகுநாத தொண்டைமான் மன்னர் தனது தாயாரின் பெயரிலேயே இவ்வூருக்கு பெயர் சூட்டியிருப்பதை யூகிக்க முடிகிறது. இத்தகைய வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதன் மூலம் நம் ஊர் பெருமையையும் காக்க முடியும் என்றார்.

Tags : King , Innovation, King's Inscription, Discovery
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்