கட்சி பாராமல் தொகுதிக்கு திட்டங்களை முதலமைச்சர் தொடர்ந்து கொடுக்கிறார் : சட்டபேரவையில் பாஜக நயினார் நாகேந்திரன் பாராட்டு

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பாஜக சட்டபேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகையில் ‘‘திருநெல்வேலியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில் ‘‘திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது 1 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 9 அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரியும், 18 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மானுரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டு 2022-23ம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இதை தவிர 1 அரசு பொறியல் கல்லூரியும், 12 சுயநிதி பொறியியல் கல்லூரியும், 1 பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் மற்றும் 1 அரசு உதவி பெறும் தொழில்நுட்ப கல்லூரியும், 14 சுயநிதி தொழில் நுட்ப கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.

இந்த கல்லூரிகள் தொகுதி மாணவர்களின் உயர்கல்வி தேவைகளை நிறைவு செய்வதால், புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டபேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசிய போது, இந்த கேள்வி நமது அரசு வந்த உடன் முதல் முதலில் போடப்பட்டு அதை உடனடியாக முதலமைச்சர் நிறைவேற்றி கொடுத்தார். அதற்கு நன்றி. ஏற்கனவே நன்றி சொல்லிட்டேன், இரண்டாம் முறை நன்றி சொல்கிறேன். அதே போல் திருநெல்வேலி நெல்லை அப்பர் கோயிலுக்கு 30 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் அறிவுறுத்தல் பேரில் அறநிலைய துறை அமைச்சர் திட்டங்கள் கொடுத்துள்ளார்.

அதே போல் நெடுஞ்சாலை துறை அமைச்சர் முதலமைச்சர் அறிவுறுத்தல் படி புறவழிச் சாலை சாலை வெகு விரைவில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதேபோல் முதலமைச்சர் ஏற்கனவே ஆதிச்சநல்லூர் ஆராய்ச்சி நிலையம் 18 கோடி ரூபாய்  செலவில் திருநெல்வேலியில் அமைத்து தரப்படும் என தெரிவித்துள்ளார். இப்படி தொடர்ந்து கட்சி பாராமல் திருநெல்வேலி மாவட்டத்திற்கு திட்டங்கள் தரும் முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி என குறிப்பிட்டு பேசினார்.

Related Stories: