14 வயது சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் செய்ய முயற்சி: அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் சிறுமியின் தாய் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். குடும்பத்தில் வறுமை காரணமாக சிறுமி 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். மேற்கொண்டு படிக்க முடியாத நிலையில் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார்.

எனவே தான் வறுமையில் இருந்தாலும் மகள் வசதியாக இருக்க வேண்டும் எனக்கருதிய தாய், தமிழக-ஆந்திர எல்லையோர கிராமத்தில் வசிக்கும் வசதி படைத்த 40 வயது நபருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி இருதரப்பிலும் பேசி முடிவு செய்யப்பட்டது. இன்று காலை அவர்களின் திருமணம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கோயிலில் நடைபெற இருந்தது. இதையறிந்த சமூக ஆர்வலர்கள், வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று தகவல் தெரிவித்தனர்.

இதை தடுத்து நிறுத்தும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டார். இதையடுத்து குடியாத்தம் தாசில்தார் லலிதா தலைமையிலான வருவாய்த்துறையினர், ஹெல்ப்லைன் போலீசாருடன் நேற்று சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்றனர். அங்கு சிறுமியின் தாயிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு 40 வயது நபருடன் திருமணம் நடக்க இருப்பது உறுதியானது. இதனையடுத்து ‘பெண்களுக்கு 18 வயதுக்கு முன்னதாக திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். இதனால் சிறுமிகள் பாதிக்கப்படுவார்கள்.

இதை மீறி திருமணம் செய்ய முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என சிறுமியின் தாய் மற்றும் உறவினர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். இதனை தொடர்ந்து சிறுமிக்கு இன்று நடக்கவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Related Stories: