×

விஜய ரெகுநாத தொண்டைமான் மன்னர் தாயார் பெயரில் கட்டிய சத்திரத்தில் 2 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை : புதுக்கோட்டைஅருகே விஜய ரெகுநாத தொண்டைமான் மன்னர் 1781 ம் ஆண்டு பயணிகள் இளைப்பாறுவதற்காக கட்டிய சத்திரத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் கருப்பட்டிபட்டி ஊராட்சி மன்றம் ஆயிப்பட்டி கிராம எல்லையில் சாலை ஓரமாக இடிந்த நிலையிலுள்ள தொண்டைமான் காலத்தைய சத்திரத்தில் இரண்டு கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல்துறை ஆய்வாளரும், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தின் நிறுவனருமான மங்கனூர் ஆ.மணிகண்டன் கூறியதாவது:
புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல வழித்தடங்களில் சத்திரங்களை ஏற்படுத்தியவர் என்ற புகழுடைய மன்னர் விஜய ரெகுநாத தொண்டைமானாவார். கல்லாக்கோட்டை மற்றும் அம்புக்கோவில் ஆகிய ஊர்களுக்கு செல்வதற்கான முக்கிய சாலையாக ஆயிப்பட்டி சாலை இருந்துள்ளதையும், அதன் காரணமாகவே மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இவ்வழியில் சத்திரம் கட்டியுள்ளதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

விசய ரெகுநாத தொண்டைமான் தர்ம நோக்கோடு வழிப்போக்கர்கள், கால்நடைகள் இளைப்பாறுவதற்காக தனது தாயார் பெரிய ஆயி நல்ல காத்த அம்மாள் பெயரில் இச்சத்திரத்தை கட்டியுள்ள செய்தியை “ஸ்ரீ பெரிய ஆயி நல்ல காத்த அம்மாள் அவர்கள் சத்திரம்” என்ற கல்வெட்டு கிழக்கு வாயிற் நிலைத்தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டிற்கு எதிரேயுள்ள மேற்குப்புற வாயிற் நிலைத்தூணில் “சாற்வரி வருஷம் தயி (தை) மீ (மாதம்) 13 ல் ஸ்ரீ விசைய ரெகுனாத தொண்டைமானாராவர்கள் தர்மம்’’ என்ற செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது 1781ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 23ந் தேதி அன்று இச்சத்திரம் ஸ்ரீ விஜய ரெகுநாததொண்டைமானால் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதை குறிக்கிறது.

1759ம் ஆண்டு மே நாளன்று திருமலைராயர் தொண்டைமான் சாகிப்புக்கும், பெரிய ஆயி நல்ல காத்த அம்மாளுக்கும் மகனாக பிறந்தார். ஆட்சியிலிருந்த இராய ரகுநாத தொண்டைமானின் சிறிய தந்தையாகிய திருமலை தொண்டைமானின் மூத்த மகனான இவர், இராயரகுநாத தொண்டைமான் ஆண் வாரிசின்றி இறந்த பிறகு, தன் முப்பதாவது வயதில் அரியணை ஏறினார்.
தஞ்சாவூர் மராட்டிய அரசை 1799ம் ஆண்டு பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தன் ஆட்சிப்பகுதியோடு இணைத்துக் கொண்டாலும், புதுக்கோட்டை தொண்டைமான்களின் போர்க்கால உதவிக்காக அங்கீகாரம் அளிக்கும் விதமாக தென் இந்தியாவின் மிகப்பெரிய சக்தியாக புதுக்கோட்டை தொண்டைமான் அரசை தனித்து இயங்கிட அனுமதித்தனர்.

ஆயிப்பட்டி கிராம எல்லைகுட்பட்ட பகுதியில் பெரிய ஆயி நல்ல காத்த அம்மாள் சத்திரம் அமைந்திருப்பதன் மூலம் ரெகுநாத தொண்டைமான் மன்னர் தனது தாயாரின் பெயரிலேயே இவ்வூருக்கு பெயர் சூட்டியிருப்பதை யூகிக்க முடிகிறது.இத்தகைய வரலாற்று சின்னங்களை பாதுகாப்பதன் மூலம் நம் ஊர் பெருமையையும் காத்திட முடியும் என்றார்.



Tags : Vijaya Regunatha Thondaiman ,King Mother , Pudukkottai: Two of the inns built by King Vijaya Regunatha Thondaiman near Pudukkottai in 1781 for the relaxation of travelers.
× RELATED விஜய ரெகுநாத தொண்டைமான் மன்னர் தாயார்...