×

மகாராஷ்டிரா அரசியலில் சிக்கி தவிக்கும் சுயேச்சை எம்பி, எம்எல்ஏ யோகா கிளாசில் ஏற்பட்ட காதல் முதல் ஜெயில் வரை...: வறுமையில் வாழ்ந்தவர் நடிகையை கரம் பிடித்தது எப்படி?

மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்படும் காதல் ஜோடியும், மக்கள் பிரதிநிதிகளுமான ரவி ராணா - நவ்நீத் ராணா தம்பதிகள் தற்போது சிறையில் உள்ளதால் அவர்களை பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றாலும் கூட எதிர்கட்சியான பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுங்கட்சிக்கு சவால் விடுக்கும் வகையில் அரசியல் நடத்தி வருகின்றன. அரசியல் ஒருபக்கம் இருந்தாலும் இந்திய சினிமாக்களின் களமாக பார்க்கப்படும் பாலிவுட்டும் இருப்பதால், அரசியல், சினிமா, கடத்தல், குற்றங்கள் என்ற பரபரப்புகளுக்கு இந்த மாநிலத்தில் பஞ்சம் இருக்காது. இத்தனைக்கும் மத்தியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிப் பெற்ற எம்எல்ஏ ரவி ராணா மற்றும் அவரது மனைவியும், நடிகையுமான எம்பி நவ்நீத் ராணா ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக இவர்கள் நாடு முழுவதும் பேசப்பட்டு வருகின்றனர். முதல்வர் வீட்டுக்கு முன்பாக அனுமன் சாலிசா பாடப் போவதாக கூறி ஆர்ப்பாட்டம் அறிவித்ததால், இவர்கள் இருவரும் தற்போது மும்பை போலீசாரால் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் ஜாமீன் மீதான விசாரணை வரும் 29ம் தேதி நடைபெறும். அதுவரை இருவரும் சிறையில் இருக்க வேண்டும். மிகப்பெரிய அரசியல் களம் கொண்ட மாநிலத்தில் ரவி ராணா மற்றும் நவ்நீத் ராணா ஆகியோர் எப்படி தேர்தலில் வென்றார்கள்? அவர்களின் வாழ்க்கையின் சுவாரஸ்ய கதைகள் தற்போது ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ரவி ராணாவின் மூத்த சகோதரர் சுனில் ராணா கூறுகையில், ‘எனது சகோதரர் ரவி ராணா, அமராவதியில் படித்துக் கொண்டே இடைப்பட்ட நேரத்தில் கட்டிட கட்டுமானத்  தொழிலுக்கு சென்று வருவார். 15 வயதில் இருந்தே குடும்பத்தின் பொறுப்பை ஏற்கத் தொடங்கினார். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் காலக்கட்டத்தில், குடிநீர் வழங்கல் துறையில் பணியாற்றினார். அதற்காக அவருக்கு மிகக் குறைந்த சம்பளம் கிடைத்தது. கல்லூரி படிக்கும் போதே, துணிக்கடையில் சேல்ஸ்மேனாக பணியாற்றினார். மக்களுடன் நெருங்கி பழகியதால் கடந்த 2009ம் ஆண்டில் முதன்முறையாக பட்னேரா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வென்றார்.

அப்போது மும்பையில் பாபா ராம்தேவின் யோகா முகாமில் மாடல் அழகியும், நடிகையுமான நவ்நீத்தை சந்தித்தார். இருவருக்கும் அப்போது ஏற்பட்ட நட்பானது காதலாக மாறியது. ரவி ராணாவின் சமூக சேவையால் ஈர்க்கப்பட்ட நவ்நீத் ரவி ராணாவை திருமணம் செய்து கொள்வதாக விருப்பம் தெரிவித்தார். இருதரப்பு சம்மதத்துடன் ரவி ராணா - நவ்நீத் ராணாவின் திருமணம் கடந்த 2011ம் ஆண்டு அமராவதியில் நடந்தது. அப்போது இவர்களுடன் சேர்த்து 4,120 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது. முன்னாள் முதல்வர்  பிருத்விராஜ் சவான், பாபா ராம்தேவ், விவேக் ஓபராய்  ஆகியோரும் திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
ரவி ராணா விரும்பி இருந்தால் ஆடம்பரமாக தனது திருமணத்தை நடத்தி இருக்க முடியும். ஆனால், எளிமையாக திருமணம் செய்து கொண்டார். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின் போது சுமார் 1 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அன்னதானம் செய்கிறார். திருமண வாழ்க்கை ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்கையில், அரசியலிலும் மக்களுக்கு சேவை செய்து வந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக பத்னேரா தொகுதியில் ரவி ராணா வெற்றிப் பெற்றார். தம்பதிக்கு தற்போது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

நவ்நீத் ராணா பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்டவர். பி.காம் வரை படித்துள்ள  நவ்நீத் மாடலிங் மூலம் சினிமா துறைக்குள் நுழைந்தார். ஆறு இசை ஆல்பங்களில் நடித்துள்ளார். தென்னிந்திய  திரைப்படத் துறையில் கன்னடம் உள்ளிட்ட மொழிகளின் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரவி ராணாவை  மணந்த பிறகு, தனது கணவருடன் சேர்ந்து தீவிர அரசியல் மற்றும் சமூக சேவையில் நவ்நீத் ஈடுபட்டார். கடந்த 2014ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், அமராவதி (எஸ்சி) தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவாக போட்டியிட்டு தோற்றார்.  அப்போதிருந்த சிவசேனாவுக்கும், நவ்நீத்துக்கும் மோதல் இருந்து வந்தது. தொடர்ந்து மக்களை சந்தித்து தனது தோல்வியை  வெற்றியாக மாற்ற, இரவு பகலாக மாவட்டம் முழுவதும் உழைத்தார்.

மக்களையும்,  அவர்களின் பிரச்னைகளையும் கேட்டறிந்து 2019ம் ஆண்டு நடந்த  மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய சிட்டிங் சிவசேனா எம்பி ஆனந்தராவ் அட்சுலை தோற்கடித்தார். தற்போது வரை நாங்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறோம். நவ்நீத் ராணாவுக்கு 8 மொழிகள் பேசத் தெரியும். 2024ல் பேரவை தேர்தல் வரவுள்ளதால், அதற்கு முன்னதாக ஆளுங்கட்சி - எதிர்கட்சிகள் தங்களது இருப்பை காட்ட அரசியல் நடத்தி வருகின்றன. இதற்கிடையே சுயேச்சை எம்எல்ஏவான எனது சகோதரர் ரவி ராணாவும், அவரது மனைவி நவ்நீத் ராணாவும் மாட்டிக் கொண்டனர். தற்போது சிறையில் உள்ளனர்’ என்று கவலையுடன் தெரிவித்தார்.



Tags : MLA ,Maharashtra , Maharashtra, Sikki, Independent MP, MLA Yoga, Jail to ...:
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...