×

புதுக்கோட்டையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு திருவிழாக்களில் தர்பூணி, சர்பத் விற்பனை ஜரூர்-வியாபாரிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாக்களில் தற்பூசனி, தண்ணீர் பாட்டில், சர்பத், கூல் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் பொங்கல் தொடங்கி சில வாரங்கள் சில நாட்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பொங்கல் தொடங்கி மாவட்டத்தில் தொடர்ந்து ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த கிராமத்தினர் முடிவு செய்து வருவாய்துறையினரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கின்றனர். இதனையடுத்து வருவாய்துறையினரின் வழிகாட்டுதல்படி விதிமுறைகள கடைபிடித்து ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் செய்கின்றனர்.

ஒரு கிராமத்தில் ஜல்லிக்கட்டு என்றால் ஒரு மாதத்திற்கு முன்பே ஏற்பாடுகளில் இறங்கி விடுகின்றனர். இதனால் இது குறித்த செய்தி தர்பூசணி, தண்ணீர், பைனாப்பிள், சர்பத், கூழ், ஐஸ், மோர் உள்ளிட்ட பல்வேறு வகையான சிறு உணவு பொருட்களை விற்பனை செய்யும் சிறு வியபாரிகளுக்கு தெரிந்து விடுகிறது. இதனையடுத்து அவர்கள் அதற்கு ஏற்றார்போல் மொத்தமாக பொருட்களை வெளி மாவட்டங்களில் இருந்து ஆர்டர் செய்து வீட்டில் வாங்கி வைத்துக்கொள்கின்றனர்.

பின்னர் ஒவ்வொரு ஜல்லிக்கட்டு விழாவுக்கும் வரும் பார்வையாளர்களை பொருத்து பொருட்களை முதல் நாள் இரவே எடுத்து சென்று இடம் பிடித்து தற்காலிக கடைகள் அமைத்து விடுகின்றனர். பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கிய நேரத்தில் இருந்து முடியும் வரை வியாபாரம் களைகட்டுகிறது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் நடைபெறுவதாகவும், இங்கு நடைபெறும் வியாபாரத்தில் இதுவரை எங்களுக்கு நஷ்டமே வந்தது இல்லை என்று தர்பூசணி, குளிர்பானங்கள் தற்காலிக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகஅளவு ஜல்லிக்கட்டு நடைபெறுவதால் நாங்கள் வேறு மாவட்டத்திற்கு செல்வதில்லை. பொங்கல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

ஜல்லிகட்டு காளை வைத்திருப்பவர்களிடம் தொடர்பு வைத்துக்கொண்டு எந்த தேதியில் எந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிந்துகொள்வோம். அவ்வாறு தெரிந்துகொண்டு நாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை முதல் நாளே கொண்டு சென்று கடைகள் அமைத்து விடுவோம். ஜல்லிக்கட்டு தொடங்கியது முதல் நாங்கள் விற்பனையை தொடங்கி விடுகிறோம். நாங்கள் விற்பனை செய்யும் அனைத்து விதமான பொருட்களும் ரூ.20க்கு மேல் இல்லை.

காளைகளை விரட்டிப்பிடித்து களைப்பு ஏற்படும் போதெல்லாம் விற்பனை அதிகரிக்கும். ஜல்லிக்கட்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை தொய்வின்றி வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதனால் பல லட்சம் ரூபாய் வர்த்தகம் நடைபெற்றுள்ளது என்றனர்.

Tags : Jarikattu ,Pudukkottai Jarur , Pudukkottai: Jallikattu festivals in Pudukkottai district include watermelon, water bottle, sarpad, cool and other items.
× RELATED அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக...