நெமிலியில் உலக புத்தக தின விழா போட்டித் தேர்வு நூல்கள், கணினி பிரிவு சேவை-ஒன்றியக் குழு தலைவர் திறந்து வைத்தார்

நெமிலி : நெமிலியில் உலக புத்தக தின விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் போட்டித் தேர்வு நூல்கள், கணினி பிரிவு சேவை ஆகியவற்றை நெமிலி ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு திறந்துவைத்தார்.நெமிலி பேரூராட்சியில் சாய்ராம் நகரில் கிளை நூலகம் செயல்பட்டு வந்தது. இந்த நூலகம் 1965ம் ஆண்டு கட்டப்பட்டு பழமை வாய்ந்ததாக உள்ளது. அதில் 1992ம் ஆண்டு புதிய நூலகம் கட்டப்பட்டு சாய்ராம் நகரில் பயன்பாட்டில் இருந்து வந்தது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளது. தினசரி 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் என அனைத்து தரப்பினர் நூலகத்திற்கு வந்து பயனடைந்தனர்.

இதில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக நெமிலி சாய் ராம் நகரில் செயல்பட்டு வந்த நூலகம் பழுதடைந்து நூலக கட்டிடத்தில் மழை நீர் ஒழுகி புத்தகங்கள் நீரில் நனைந்து வீன் அடைந்தது. உடனடியாக புதிய நூலகக் கட்டிடம்  வாசகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதன் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி தினகரன் செய்தித்தாளில்  படத்துடன் கூடிய விரிவான செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக இதனைக் கண்ட மாவட்ட நூலக அதிகாரி மற்றும் நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு ஆகியோர் நேரில் வந்து நூலக கட்டிடத்தை ஆய்வு செய்து உடனடியாக மாற்று  நூலகர் கட்டிடத்தை தருவதாக உறுதியளித்தனர்.

அதன் பேரில் நெமிலி பேரூராட்சியில் உள்ள பழைய  பிடிஓ அலுவலக கட்டிடம்  செயல்படாமல் இருந்தது. அந்த  கட்டிடத்தை  உடனடியாக சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதில் நேற்று முன்தினம் நூலகம் கட்டிடமாக மாற்றப்பட்டு ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு அதனை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து  அதில் உலக புத்தக தின விழா கொண்டாடப்பட்டு மேலும் போட்டித் தேர்வு நூல்கள் அறை, கணினி சேவை பிரிவு ஆகியவற்றை திறந்து வைத்தனர்.

விழாவில் ஒன்றியக்குழு தலைவர் வடிவேலு, நெமிலி பேரூராட்சி தலைவர் ரேணுகாதேவி சரவணன், மாவட்ட ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் சுந்தரம்மாள் பெருமாள் ஆகியோர் தங்களை பெரும் புரவலராக தலா ₹5000 செலுத்தி இணைத்துக்கொண்டனர்.மேலும் சயனபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பவானி வடிவேலு, முகமது அப்துல் ரகுமான், வழக்கறிஞர் அன்பழகன் ஆகியோர் தங்களை புரவலராக தலா ₹1000 செலுத்தி இணைத்துக்கொண்டனர். மேலும் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் உறுப்பினராக சேர்ந்தனர். அப்போது வாசக வட்டாரத் தலைவர் சுரேந்திரநாத், நெமிலி நூலகர் சேதுராஜ், ஆசிரியர்கள் பள்ளி மாணவிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: