வேலூர் காந்தி நகரில் சிதிலமடைந்த நூலக கட்டிடத்தில் செல்லரிக்கும் புத்தகங்கள்-பொதுமக்கள், கல்வியாளர்கள் வேதனை

வேலூர் : காட்பாடி காந்தி நகர் கிளை நூலக கட்டிடம் சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் அதில் உள்ள புத்தகங்கள் குப்பை குவியலாய் செல்லரிக்கும் அபாயத்தில் இருப்பது பொதுமக்களையும், கல்வியாளர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்பது மேநாட்டு அறிஞர் டேவிட் ஹியுகோவின் கூற்று. மைசூர் மன்னன் திப்புசுல்தான், தனது திருமண பரிசாக நூலகம் வேண்டும் என்று தந்தை ஹைதரிடம் கேட்டானாம்.

லண்டன் மியூசியம் நூலகத்தில் 16 ஆண்டுகள் கழித்த பிறகே காரல்மார்க்ஸ், தனது பொதுவுடமை சித்தாந்த நூலான ‘மூலதனம்’ என்ற தாஸ்காப்பிடலை படைத்தானாம். காரல்மார்க்ஸ் தத்துவத்தை அடிப்படையாக கொண்டு ரஷ்ய புரட்சியை வழிநடத்திய லெனின் ஒரு நூலக வெறியராகவே இருந்ததாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.இந்திய அரசியலமைப்பை படைத்த அம்பேத்கர் நூலகம்  திறக்கப்படும்போது உள்ளே நுழைந்து, இரவு நூலகம் மூடப்படும்போதுதான் வெளியே வருவாராம். சென்னை கன்னிமாரா நூலகத்தில் அண்ணாவால் வாசிக்கப்படாமல் விட்ட புத்தகங்கள் இல்லை என்று கூறப்படுவதுண்டு. வீட்டுக்கு ஒரு நூலகம் என்பது அண்ணாவின் கனவு.

இத்தனை சிறப்புகளால் கொண்டாடப்படும் நூலகத்துக்கு தரமான கட்டிடம் கட்டப்பட்டு வாசகர்கள் வந்து அமர்ந்து புத்தகங்களை வாசிக்கும் நிலையில் அதன் கட்டமைப்புகள் இருக்க வேண்டும். ஆனால், சமூகத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்கும் அடித்தளமாக விளங்கும் தமிழகத்தில் பள்ளிக்கட்டிடங்களும் சரி, நூலக கட்டிடங்களும் சரி, தரமற்ற நிலையிலேயே கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வேலூர் மாவட்ட மைய நூலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்பாடி காந்தி நகர் கிளை நூலகம் ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களுடன் இயங்கி வந்தது. நூலக கட்டிடம் சிதிலமடைந்து எப்போது விழும் என்ற அபாயகரமான நிலையில் நூலகம் மூடப்பட்டு முடங்கியுள்ளது.

அதேபோல் நூலகத்தில் உள்ள புத்தகங்களும் பாழடைந்த நூலக கட்டிடத்தில் ஒரு மேஜையின் மேல் குப்பையாக குவிக்கப்பட்டு செல்லரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

காட்பாடி காந்தி நகர் கிளை நூலகத்தின் இந்த அவலநிலை அப்பகுதி மக்களிடமும், வாசகர்களிடமும், கல்வியாளர்களிடமும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காந்தி நகர் கிளை நூலக வாசகர்கள் கூறும்போது, ‘இந்த நூலக கட்டிடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகள் கூட நிறைவடையவில்லை என்பது வேதனையானது.

மாவட்ட மைய நூலக கட்டிடம் 50 ஆண்டுகளை கடந்தும் இன்றும் நல்ல நிலையில் உள்ளது. இத்தகைய சூழலில் காட்பாடி காந்தி நகர் கிளை நூலகம் மட்டுமின்றி பல கிளை நூலக கட்டிடங்களும் இந்த நிலையில்தான் உள்ளன. இந்த நூலக கட்டிடத்தை முழுமையாக இடித்து புதிதாக தரமான கட்டிடத்தை கட்ட வேண்டும். முன்னதாக இடிந்து விழும் நிலையில் உள்ள இக்கட்டிடத்தில் குவிக்கப்பட்டுள்ள புத்தகங்களை தற்காலிகமாக இடம் மாற்றி காப்பாற்ற வேண்டும்’ என்றனர்.

 இந்தியாவில் நூலகம்

பண்டைய காலத்திலேயே நாளந்தா போன்ற பல்கலைக்கழகத்திலும், தஞ்சையிலும் நூலகங்கள் இருந்தாலும் நூலக சட்டம் என்பது இந்தியாவில் 1948ல் இயற்றப்பட்டு 1950ல் நடைமுறைக்கு வந்தது. வீட்டு வரியுடன் 3 சதவீதம் நூலக வரி தமிழகத்தில் வசூலிக்கப்பட்ட நிலையில் அது 10 சதவீதமாக தற்போது வசூலிக்கப்படுகிறது. 1936ம் ஆண்டு முதல்தான் நூலகத்தில் இருந்து புத்தகங்களை எடுத்து சென்று படிக்கும் திட்டம் அறிமுகமானது.

Related Stories: