×

நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் லாரி டிரைவர் வெட்டிக்கொலை-பதற்றத்தால் போலீஸ் குவிப்பு

நெல்லை :  நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் நேற்றிரவு லாரி டிரைவரை மர்ம நபர் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடினார். இதில் படுகாயமடைந்த லாரி டிரைவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். நெல்லை மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே உள்ள சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சசிகுமார் (40). இவர் காய்கறிகளை ஏற்றி வரும் மினி லாரி டிரைவர் ஆவார். இவர் வேலை இல்லாத நாட்களில் நெல்லை டவுன் நயினார்குளம் காய்கறி மார்க்கெட்டில் லோடுமேனாகவும் வேலை பார்த்து வருகிறார்.

நேற்றிரவு காய்கறிகளை மினி லாரி மூலம் தச்சநல்லூர் நயினார்குளம் மார்க்கெட்டிற்கு சசிகுமார் கொண்டு வந்தார். பின்னர் அவர் மற்ற லோடுமேன்களுடன் சேர்ந்து காய்கறிகளை மினி லாரியிலிருந்து இறக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த இரு மர்ம நபர்களில் ஒருவர் திடீரென சசிகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தன்னுடன் வந்தவருடன் பைக்கில் ஏறி தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் சசிகுமார் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் இறந்தார்.

 தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த மாநகர மேற்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் கே.சுரேஷ்குமார், போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து முதற்கட்ட விசாரணையில், சசிகுமாருக்கும் அதே ஊரை சேர்ந்த ஒருவருக்கும் நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இதனையடுத்து கடந்த வாரம் நில தகராறு காரணமாக சசிகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்தவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்தனர். இதன் எதிரொலியாக சம்பவம் நடத்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மேலும் நயினார்குளம் காய்கறி மார்க்கெட், மானூர், அழகியபாண்டியபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Nellai Town Nainarkulam , Nellai: A mysterious person stabbed a lorry driver at the Nainarkulam vegetable market in Nellai town last night.
× RELATED அயனிங் தொழிலாளி போல் சென்னையில்...