×

கொளுத்தும் வெயிலால் குவியும் கூட்டம் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

தென்காசி :  குற்றாலத்தில் விடுமுறை தினமான நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. பழைய குற்றால அருவியில் மிதமான தண்ணீா் கொட்டுகிறது. தற்போது கோடை காலமாக இருந்த போதும் கடந்த சில தினங்களாக மாலை வேளைகளில் மழை பெய்ததால்  குற்றால அருவிகளில் சற்று தண்ணீர் விழுகிறது. பழைய குற்றாலத்தில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது.

மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும், பெண்கள் பகுதியில் மிகவும் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுகிறது. கோடைகாலத்தில் தண்ணீர் விழுவதாலும், விடுமுறை தினம் என்பதாலும் நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. மெயின் அருவியில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

பெண்கள் பகுதியில் தண்ணீர் இல்லாத காரணத்தால் ஆண்கள் பகுதியிலேயே சிறிது நேரம் பெண்களும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பழைய குற்றாலத்தில் ஓரளவு நன்றாக தண்ணீர் விழுந்ததால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலம் நோக்கி படையெடுத்துச் சென்றனர்.

 இதற்கிடையே  இன்று 25ம் தேதி முதல் மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மாலை 6 மணிக்கு மேல் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்படுகிறது. அதேசமயம் பழைய குற்றாலத்தில் தடை தொடர்ந்து நீடிக்கிறது. தற்போதைய சூழலில் பழைய குற்றாலத்தில் மட்டுமே ஓரளவு தண்ணீர் நன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Courtallam Falls , Tenkasi, Coutrallam, Tourist
× RELATED 8 மாதங்களுக்கு பின்னர் இன்று முதல்...