×

2022ம் ஆண்டுக்கான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பு பறவையினங்கள் கண்டறிவதில் உலக அளவில் சேலம் முதலிடம்

சேலம் : சேலத்தில் நடந்த 2022ம் ஆண்டுக்கான ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பில், 8,175 பறவையினங்களை கண்டறிந்து உலக அளவில் சேலம் மாவட்ட குழுவினர் முதலிடம் பிடித்தனர். உலகெங்கும் வாழும் பறவைகளை பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள, ஆண்டுதோறும் பல்வேறு விதமான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், பறவைகளின் வாழ்விடங்கள், நடத்தை மற்றும் பிற இனங்களுடனான தொடர்பு, அவற்றின் பரவல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை, பறவையியல் ஆர்வலர்கள் அறிந்து கொண்டு, மக்களுக்கு அதனை தெரியப்படுத்துகின்றனர். அதன்படி, உலகளாவிய ஊர்ப்புற பறவைகள் கணக்கெடுப்பின் 10வது பதிப்பை, `இந்திய பறவைகள் கணக்கெடுப்புக்  குழுமம்’ இந்தியாவில் ஒருங்கிணைத்தது.

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி  18 முதல் 22 வரை பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவை  பட்டியல்களைச் சமர்ப்பித்து உலக அளவில் இரண்டாம் இடத்தை இந்தியா பிடித்துள்ளது. இந்திய அளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவை பட்டியல்களுடன், தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் நடந்த கணக்கெடுப்பில் 8,175 பறவைகள் பட்டியல்களைச் சமர்ப்பித்து, உலக அளவில் பறவைகளைப் பார்த்து பதிவு செய்வதில் சேலம் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, `சேலம் பறவையியல் கழகம்’ இந்த கணக்கெடுப்பை ஒருங்கிணைத்தது. பறவையியல் கழகத்தை  சேர்ந்த ஏஞ்சலின் மனோ என்பவர், தொடர்ந்து 4 நாட்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு 384 பறவை பட்டியல்கள் சமர்ப்பித்துள்ளார். இதுதான் தனிநபர் பிரிவில் உலக அளவில் முதலிடமாகும். இதேபோல், பறவை ஆர்வலர்கள் கணேஷ்வர், செந்தில் குமார், சுப்பிரமணிய சிவா, வடிவுக்கரசி ஆகியோர் தனிநபர் பிரிவுகளில் அதிக பறவைப்  பட்டியல்கள் சமர்ப்பித்து, உலகின் முதல் பத்து பறவை ஆர்வலர்கள் வரிசையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த 2015ஆம் ஆண்டு முதல், தனிநபர் பிரிவில் அதிக பறவைப்  பட்டியல்கள் சமர்ப்பித்து, தொடர்ந்து  8 ஆண்டுகளாக சேலம் பறவையியல் கழகம் முதலிடத்தை பிடித்து வருகிறது.

இதுகுறித்து அந்த அமைப்பைச் சேர்ந்த ஏஞ்சலின் மனோ கூறியதாவது: உலகம் முழுவதும் பறவைகளை பற்றிய தேடலில் இணையும் ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த கணக்கெடுப்பின்  முடிவில் உலகம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களால் சமர்பிக்கப்படும் தரவுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் உதவி அளிக்கிறது. கணக்கெடுப்பின்போது பதிவு செய்த அனைத்து பறவைப் பட்டியல்களும்  e-Bird இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.  

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளி மாணவர்களிடையே, பறவைகள் கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. நடப்பாண்டு நடந்த கணக்கெடுப்பில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். குறிப்பாக, தாரமங்கலம் அடுத்த கிருஷ்ணம்புதூர் நடுநிலைப்பள்ளிப் பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆசிரியை வடிவுக்கரசி வழிகாட்டுதலோடு 4,316 பறவை  பட்டியல்கள் சமர்ப்பித்து, குழு பிரிவில் உலக அளவில் முதல் இடத்தை  பிடித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக இப்பள்ளி மாணவர்கள் உலக அளவில்  முதலிடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

 தளவாய்ப்பட்டி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ராஜாங்கம்  தலைமையில், தளவாய்பட்டி ஏரியில் மாணவர்கள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர். இலட்சுமாயூர் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் தலைமையாசிரியர் பழனிவேல்  உதவியோடு பறவைகளை பதிவு செய்தனர். ஜம்பூத்துமலை  பகுதியில், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை  ஆசிரியர் கலைச்செல்வன்,  ஆசிரியர் ரவிசங்கர் ஆகியோருடன் பள்ளிக் குழந்தைகள்  கணக்கெடுப்பை மேற்கொண்டனர். அங்கு, சாம்பல் வாலாட்டி, ஜெர்டான் பக்கி,  டிக்கெல் நீல ஈப்பிடிப்பான் முதலிய பறவைகள் பதிவு செய்யப்பட்டன.

மேட்டூர்  பகுதியில் கணக்கெடுப்பை மேற்கொண்ட பறவை ஆர்வலர்கள் சாம்பல் இருவாச்சி,  பூமன் ஆந்தை, சின்ன மின்சிட்டு மற்றும் வலசை வரும் பறவைகளான ஐரோப்பிய  பஞ்சுருட்டான், மஞ்சள் வாலாட்டி, வெண் புருவ வாத்து, மண் கொத்தி, பொறி மண்கொத்தி, பச்சைக்கால் உள்ளான், மீசை ஆலா ஆகியவற்றை பதிவு செய்தனர். மிக  அரிய வகையான வெண்கழுத்து பட்டாணிக்  குருவியை பதிவு செய்ததும்  குறிப்பிடத்தக்கது.

 ஏற்காட்டில்  திருமலை வெங்கடராமன், சக்தி  சின்னக்கண்ணு ஆகியோர் சின்னக் காட்டு ஆந்தை, செந்தலைக் கிளி, வெண்  வயிற்றுக் கரிச்சான், துடுப்புவால் கரிச்சான், கருந்தலை மாங்குயில்,  காட்டுப் பாம்புக்கழுகு, காட்டுப் பஞ்சுருட்டான், வெண்கன்ன குக்குறுவான்,  வரிமுகப் பூங்குருவி போன்றவற்றைப் பதிவு செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் கணக்கெடுப்பில் கலந்து கொள்பவர்கள் மற்றும் கண்டறியப்படும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்று, இயற்கை மீதும், பறவைகள்  மீதும் ஆர்வம் கொண்டவர்கள், மக்கள் அறிவியல் திட்டங்களில்  பங்களிப்பதின் மூலம், பறவைப் பாதுகாப்பிற்கு உதவலாம். இதற்கு, பொதுமக்கள்  மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு அவசியமாக உள்ளது. இவ்வாறு ஏஞ்சலின் மனோ தெரிவித்தார்.

Tags : Salem ,Eastern , Salem, Birds Calculation, World First
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...