×

நீலகிரியில் கோடை சீசன் துவங்கி உள்ளதால் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரயில் இயக்கப்படுமா?

*சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்படுகிறது. கல்லார் முதல் குன்னூர் வரை 22 கி.மீ. தூரம் மேற்கு தொடர்ச்சி மலையின் அழகிய பள்ளத்தாக்குகளையும் உயர்ந்து நிற்கும் மலைகளையும் ரசித்தவாறு சுற்றுலா பயணிகள் பயணிக்க முடியும்.

மேலும், இயற்கை அழகை ரசித்தவாறு செல்லமுடியும் என்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை செல்லும் ரயில் காலை 7:10 புறப்படுகிறது. இது நான்கு பெட்டிகளுடன் இயக்கப்படுவதால் 180 பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும்.

 அதுவும் அதிக அளவு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை என்பதால் பலருக்கும் இந்த ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. தற்போது, நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளதால் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுவதால் கூட்டம் அலை மோதுகிறது.

பெரும்பாலான சுற்றுலா பயணிகளுக்கு மலை ரயிலில் பயணிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை அனைவரும் மலை ரயிலில் பயணிக்கும் விதமாக மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி வரை கோடைகால சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nilagiri , Ooty, Mountain Train, Mettupalayam, Tourist
× RELATED நீலகிரியில் மழை குறைந்ததால் மைக்ரோ...