பாசிச நச்சுக் கருத்துகளை திணித்த அரசுகள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டன...சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கத்துக்கு வைகோ கண்டனம்

சென்னை: ஜனநாயகம், பன்முகத்தன்மை, முகலாய ஆட்சிகள் பற்றிய பாடங்களை நீக்கியதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ நிர்வாகம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவுறுத்தலின் அடிப்படையிலும், பகுத்தறிவின் அடிப்படையிலும் பல பாடங்கள் நீக்கியுள்ளது. அதாவது, 11, 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து அணிசேரா இயக்கம், பனிப்போர் யுகம், ஆப்ரிக்க-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, முகலாய நீதிமன்றங்களின் வரலாறு, தொழிற்புரட்சி ஆகிய பாடங்களை நீக்கியுள்ளது.

மேலும் 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம் என்ற பாடமும் நீக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பில் மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு ஆகிய பிரிவில் இருந்து உருது கவிஞர் ஃபைஸ் அகமது ஃபைஸின் 2 கவிதைகளும் இந்த வருடம் நீக்கப்பட்டுள்ளன. இந்த புதிய பாடத்திட்டம் 2022-2023 கல்வியாண்டில் நடைமுறைக்கு வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்க்கு பல தரப்பினர் தங்களது கண்டனத்தையும், கருத்துக்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரது கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இந்திய வரலாற்றை மதவெறி நோக்கில் திரித்து எழுதும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பள்ளிப் பாடங்களை நீக்கியதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார்களின் சிந்தனை போக்கு இருப்பது தெரிகிறது. மேலும் இந்து ராஷ்டிரா கொள்கைக்கு வலு சேர்க்க, வரலாற்று உண்மைகளை மறைத்து படங்களை மாற்றுவதற்கு கண்டனம் என அவர் கூறியுள்ளார்.  

அதனையடுத்து, ஜெர்மனிய ஹிட்லர் அரசும், இத்தாலியின் முசோலினி அரசும் இப்படித்தான் பள்ளிக் குழந்தைகளுக்கு மூளைச் சலவை செய்தது. பாசிச நச்சுக் கருத்துகளை திணித்த அரசுகள் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி வீசப்பட்டன. மேலும் பாஜக அரசின் வரலாற்றுத் திரிபு வேலைகள் வெற்றி பெறாது. வரலாற்று பாடங்களை நீக்குவதையும், இருட்டடிப்பு செய்வதையும் பாஜக அரசு கைவிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Stories: