×

புதுச்சேரிக்கு வந்த அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதச்சார்பற்ற கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: போலீசாருடன் தள்ளுமுள்ளு கொடும்பாவி எரிக்க முயற்சி

புதுச்சேரி:  புதுச்சேரி வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு  தெரிவித்து மதசார்பற்ற கட்சிகள் சார்பில் நேற்று கருப்புக்கொடி  ஆர்ப்பாட்டம் நடந்தது. கருப்புக்கொடிகளை போலீசார்  பறிமுதல் செய்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தமிழை பழித்து இந்தியை  திணிக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  வகையில் அமித்ஷாவே திரும்பி போ என்ற முழக்கத்தோடு மதசார்பற்ற முற்போக்கு  கூட்டணி கட்சிகள் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நேற்று சாரம் அவ்வை  திடலில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சிபிஐ மாநில செயலாளர் சலீம் தலைமை  தாங்கினார்.

காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள்  முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள்  கமலக்கண்ணன், விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்-எல்), விசிக, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக்  கட்சியினர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அமித்ஷாவுக்கு  எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் கோஷங்களை எழுப்பினர்.
எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான போலீசார் அவர்களிடமிருந்து கருப்பு கொடிகளை பறித்தனர். இதையடுத்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு  ஏற்பட்டு கடும் வாக்குவாதம் நடந்தது.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு  ஏற்பட்டது. முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறுகையில், மோடி அரசு புதுச்சேரி வளர்ச்சிக்காக புதிதாக எதுவும் கொடுக்கவில்லை. முதல்வர் ரங்கசாமியை கைப்பாவையாக வைத்து கொண்டு பினாமி ஆட்சி நடத்துகிறார்கள். துணைநிலை ஆளுநர் சூப்பர் முதல்வராக செயல்படுகிறார்.  அமித்ஷா புதுவைக்கு வருவதால் என்ன பயன்? எனவேதான் அவர் திரும்பி செல்ல வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம் என்றார்.

கொடும்பாவி எரிக்க முயற்சி: தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் புதுவை காமராஜர் சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே நேற்று காலை அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தினர். அமைப்பின் தலைவர் வீரமோகன் தலைமை தாங்கினார். தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் கலந்துகொண்டனர்.

அனைவரும் கருப்பு கொடி ஏந்தி அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென அமித்ஷாவின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அப்போது போலீசார் கொடும்பாவியை பறித்தனர். இதனால் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : Amitshah ,Puducherry , Black flag protest on behalf of secular parties against Amit Shah who came to Pondicherry: Attempt to burn scorpion with police
× RELATED புதுச்சேரியில் பரபரப்பு பறக்கும்படை சோதனையில் ₹3.5 கோடி பணம் சிக்கியது