×

மதுரை மத்தியச் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கைதிகள்

மதுரை:  மதுரை மத்தியச் சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1,350க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். கஞ்சா வழக்கில் கைதாகி சிறையில் இருந்த மதுரை முனிச்சாலையை சேர்ந்த கார்த்திக் என்ற காட்டுராஜா, 2 தினங்களுக்கு முன் கண்ணாடி துண்டுகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்த முகமது உசேன் (29), மதுரை சமயநல்லூர் மீனாட்சிநகரில் உள்ள பரவை மார்க்கெட் காய்கறி வியாபாரி சாமுவேல் வீட்டுக்குள் புகுந்து, 2 பெண்களை கட்டிப்போட்டு 135 பவுன் நகைகள் மற்றும் ரூ.12 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் உள்ளார்.

சிறையில் பிரபல ரவுடி ஒருவருக்கும், இவருக்கும் மோதல் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. பாதுகாப்பு கருதி அவரை 3வது பிளாக்கில் அடைத்தனர். ஆனால் அவர் சிறை அதிகாரிகளிடம், ‘‘என்னை மீண்டும் முதல் பிளாக்கிற்கு மாற்ற வேண்டும்’’ எனக்கூறி வந்தார். இதனை சிறை நிர்வாகம் ஏற்கவில்லை. எனவே, வேதனையடைந்த முகமது உசேன் சிறை வளாகத்தில் உள்ள டியூப் லைட்டை எடுத்து உடைத்து கை, கால், கழுத்து, தலை உள்பட பல இடங்களில் கீறி நேற்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உடனடியாக அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப்பின் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைக்குப்பிறகு மீண்டும் சிறையில் அடைத்தனர். மதுரையில், அடுத்தடுத்து கைதிகள் தற்கொலைக்கு முயன்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Madurai Central Jail , Prisoners attempt suicide at Madurai Central Jail
× RELATED மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு பல் மருத்துவ முகாம்