×

நாமக்கல் மண்டலத்தில் தொடர் சரிவு முட்டை விலை ரூ.3க்கு கொள்முதல்: தீவனமிட முடியாமல் பண்ணையாளர்கள் தவிப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலையில் 70 காசுகள் வரை குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று நாமக்கல் மண்டல என்இசிசி சேர்மன் டாக்டர் செல்வராஜ் முட்டை விலையில் மேலும் 20 காசுகள் குறைத்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 360 காசாக நிர்ணயம் செய்துள்ளார். முட்டை விலை தொடர் சரிவால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது: நாமக்கல் மண்டலத்தில் தற்போது தினமும் 4 கோடி முட்டைகள் உற்பத்தியாகிறது. கோடைகாலத்தில் முட்டையின் உற்பத்தி குறையும். ஆனால் விற்பனை குறையாது. இந்த ஆண்டு, முட்டை விலை ஏன் குறைகிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. கடந்த 40 ஆண்டாக கோழிப்பண்ணை நடத்தி வருகிறேன். முட்டை விலை தற்போது ஏன் குறைந்து வருகிறது என்பதே தெரியவில்லை.

ஐதராபாத்  மண்டலத்தில் முட்டையின் விலை 290 காசாக இருப்பதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளதாக என்இசிசி தெரிவித்துள்ளது. பண்ணையாளர்கள் இடையே ஒற்றுமையின்மையால் உற்பத்தி விலையில் இருந்து ₹1.50 காசு வரை குறைத்து முட்டை விற்பனை செய்யவேண்டிய நிலை உள்ளது. தற்போது என்இசிசியின் முட்டை நிர்ணய விலை 360 காசாக இருந்தாலும், வியாபாரிகள் 60 காசு குறைத்து ஒரு முட்டையை ₹3க்கு வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் ஒரு முட்டையின் உற்பத்தி செலவு ₹4.50 காசாக இருக்கிறது. இதனால் தினமும் பண்ணையாளர்களுக்கு முட்டை விற்பனையில் ₹7 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. கோடைகாலத்தில் ஒரு கோழி தினமும் 105 கிராம் வரை தீவனம் எடுத்துக் கொள்ளும். 3 வேளையும் பண்ணைகளில் கோழிகளுக்கு தீவனம் அளிக்கப்படுகிறது. தற்போது முட்டை விலை குறைந்து வருவதால், கோழிகளுக்கு சரியாக தீவனமிட முடியவில்லை. பெரும்பாலான பண்ணையாளர்கள் தினமும் ஒரு வேளை தான் கோழிகளுக்கு தீவனம் கொடுக்கிறார்கள். இதேநிலை இன்னும் 10 நாள் நீடித்தால் அனைத்து பண்ணையாளர்களும் கடும் பாதிப்படைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Namakkal , Continuing decline in Namakkal region Egg prices purchase at Rs. 3: Farmers suffering from inability to feed
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...