ஆளுநர் மாநாட்டை துணைவேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும்: முத்தரசன் வேண்டுகோள்

சென்னை: ஆளுநர் நடத்தும் பல்கலைக் கழகங்களின் சிறப்பு மாநாட்டை, பல்கலைக்கழக துணைவேந்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சட்ட மரபின் படியும், பதவி வழி முறையிலும் பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படும் ஆளுநர், இன்று மற்றும் நாளை, ஆளுநர் மாளிகையில் “வளர்ந்து வரும் உலகில் இந்தியாவின் பாத்திரம்” மற்றும் “2047ம் ஆண்டில் உலகின் தலைவராகும் இந்தியா” என்ற பொருளில் பல்கலைக் கழகங்களின் சிறப்பு மாநாடு கூட்டியுள்ளார். இதில் ஒன்றிய, மாநில அரசுகளின் பல்கலைக் கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களும் பேராசிரியர்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர், ‘‘பல்கலைக் கழகங்களின் இணை வேந்தர்’’ பொறுப்பை பதவி வகித்து வருகிறார். ஆளுநர் மாளிகை அறிவிப்பில் அமைச்சர் பங்கேற்பு குறித்து எந்தத் தகவலும் இடம் பெறவில்லை. ஆனால் பன்னாட்டு தொழில்நுட்ப தனியார் நிறுவனமான சூ ஹோ கழகத்தின் நிறுவனரும், முதன்மை நிர்வாக அலுவலருமான ஸ்ரீதர் வேம்பு முக்கிய உரையாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு அதிகாரத்தை பெற்றுள்ள ஆளுநர் மாநில சட்ட மன்றம் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையை ஏற்று செயல்பட வேண்டிய கடமைப் பொறுப்பில் உள்ளவர்.

மக்களாட்சியின் அடிப்படை கோட்பாடுகளை நிராகரித்தும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டு மொத்த உணர்வுக்கு எதிராகவும் செயல்படும் ஆளுநர் ஆர்.என். ரவியின் நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்ட அத்துமீறல் என்பதுடன் மக்கள் பிரதிநிதி ஆட்சி முறைக்கு எதிரான, போட்டி அரசை நடத்தும் அதிகபட்ச அத்துமீறலாகும். தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்க வேண்டும் என்ற வன்மத்துடன் செயப்படும் ஆளுநர் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக கண்டிக்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் மாநில அரசுக்கும், மக்களாட்சிக்கும் வழங்கியுள்ள சட்ட உரிமைகளுக்கு எதிராக ஆளுநர் கூட்டியுள்ள பல்கலைக் கழக துணை வேந்தர்கள் மாநாட்டை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சட்டமீறலில் ஈடுபடும் ஆளுநரின் மாநாட்டை துணை வேந்தர்களும், பேராசிரியர்களும் புறக்கணிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: