தலைமை மாற்றம் குறித்த தகவலுக்கு மத்தியில் என் ராஜினாமா கடிதம் ‘அவரிடம்’ உள்ளது: ராஜஸ்தான் முதல்வர் பரபரப்பு பேச்சு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் தலைமையில் மாற்றம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ஜெய்ப்பூரில் நடைபெற்ற வருவாய் சேவை கவுன்சில் மாநாட்டில் முதல்வர் அசோக் கெலாட் பேசுகையில், ‘ராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சி மாறுகிறது; முதல்வர் மாற்றப்படுவார் என்று வதந்திகள் பரவி வருகின்றன. இரண்டு மூன்று நாட்களாக இதுபோன்ற வதந்திகளை பரவிவருகிறது.

வதந்திகளால் மக்கள் குழப்பமடைகிறார்கள்; ஆட்சியும் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற வதந்திகளின் மீது நாம் கவனம் செலுத்த வேண்டியதில்லை. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியால் மூன்று முறை நான் முதல்வராக நியமிக்கப்பட்டவன். கடந்த 1998ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றது முதல், இன்று வரை நான்தான் காங்கிரசின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு வருகிறேன். என்னுடைய ராஜினாமா கடிதம் அவரிடம் (சோனியா காந்தி) உள்ளது’ என்று கூறினார்.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்ற முதல்வர் கெலாட், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். அதேபோல் கெலாட்டுக்கு எதிரணியில் உள்ள சச்சின் பைலட்டும் சோனியா காந்தியை சந்தித்தார். அதனால், தற்போது ராஜஸ்தான் காங்கிரசில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: