×

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: 1வது நடைமேடையில் புறநகர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை: சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. மாலை 4.25 மணிக்கு சென்னை கடற்கரை ரயில்நிலைய நடைமேடை- 01ல் ரயில் வந்துகொண்டிருந்தது. பணிமனையிலிருந்து திரும்பிய ரயில் என்பதால் ஓட்டுநரை தவிர யாரும் இல்லை. அப்போது நடைமேடைக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த நடைமேடையில் ஏறி கட்டிடத்தில் மோதியது. மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ரயில் ஓட்டுநர் குதித்து தப்பினார். இதில் ஓட்டுநர் பவித்ரன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் நிலையத்தில் கூட்டம் குறைவாக இருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

ரயில் மெதுவாகவே வந்ததாகவும், ஓட்டுநர் மக்களை எச்செரித்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். பிரேக் சரியாக இயங்காததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மின்சார ரயில் விபத்துக்குள்ளானது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறா, ஓட்டுனரின் கவனக்குறைவா என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும். இதனிடையே விபத்து காரணமாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் 1வது நடைமேடையில் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : Burantu accident ,Chennai Beach Railway Station , Electric train derails at Chennai beach railway station: Suburban train service was disrupted on the 1st platform
× RELATED சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில்...