×

பெரிய கோயில்களின் உபரி நிதியை சிறிய கோயில்களின் திருப்பணிக்கு மானியமாக வழங்க நடவடிக்கை: அறநிலையத்துறை தகவல்

சென்னை: பெரிய திருக்கோயில்களின் உபரி நிதியை சிறிய திருக்கோயில்களின் திருப்பணிக்காக மானியமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்திற்கும் அதிகமான திருக்கோயில்கள் உள்ளன. இதில் ஏறக்குறைய 35 ஆயிரம் திருக்கோயில்களின் ஆண்டு வருவாய் 10 ஆயிரத்துக்கும் குறைவாகும், அவற்றில் பல திருக்கோயில்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேற்ப்பட்ட புராதன  திருக்கோயில்கள் பண்டைய அரசர்களால் நிர்ணயம் செய்யப்பட்டவையாகும்.

மேற்கண்ட திருக்கோயில்களின் பராமரிப்பிற்காக பண்டைய அரசர்களால் நிலங்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. மேலும் நிலங்களிலிருந்து போதிய வருவாய் ஈட்டக்கூடிய நிலங்கள் ஏதும் இல்லாததால் பக்தர்களால் அளிக்கப்படும் காணிக்கைகள் வாயிலாக பராமரிக்கப்பட்டு வருகிறது. 12,959 திருக்கோயில்களில் ஒரு வேளை பூஜை கூட நடத்த போதிய வருவாய் இல்லாத காரணத்தால் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இத்திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக  ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.

திருக்கோயில்களில் பெரும்பானவை தனித்துவமான கட்டிடக்கலை அம்சம் கொண்ட தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்து உள்ளன. ஆனால் அந்த திருக்கோயில்களில் போதிய வருவாய் இன்மையால் உரிய பராமரிப்பின்றி  சிதிலமடைந்து நிலையில் உள்ளது. அவற்றை முறையாக புனரமைத்து, பராமரித்து, பாதுகாக்க வேண்டியது இத்துறையின் முக்கிய கடமையாகும். நிதி வசதிமிக்க திருக்கோயில்களின் உபரி நிதியினை திருப்பணிக்காக நிதி உதவி தேவைப்படும் பிற திருக்கோயில்களுக்கு மானியமாக வழங்கினால் பல்லாயிரக்கனக்கான திருக்கோயில்களை புனரமைத்து, திருப்பணி செய்து குடமுழுக்கு செய்ய இயலும்.

எனவே போதிய வருவாய் இல்லாத திருக்கோயில்களை நிதிவசதிமிக்க திருக்கோயில்களிலிருந்து  மானியம் பெற்று புனரமைத்திட அறிவுரை வழங்கப்பபட்டுள்
ளது.அனைத்து இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் தங்கள் மண்டலத்தில், சரகத்தில் உடனடியாக ஆய்வு செய்தும் அவற்றின் நிதிநிலைமையை பரிசீலித்தும் நிதி உதவி தேவைப்படும் திருக்கோயில்களின் பட்டியலை தயார் செய்ய வேண்டும். நிதி உதவி அளிக்கக்கூடிய அளவில் உபரி நிதி உள்ள திருக்கோயில்களின் பட்டியலை நிதி வசதியற்ற திருக்கோயில்களின் நிர்வாகிகளுக்கு வழங்க வேண்டும்.

நிதி உதவி தேவைப்படும் திருக்கோயில்களின் நிர்வாகிகள் திருப்பணி வேலைகளுக்கான விரிவான மதிப்பீடுகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி தயார் செய்து அதனடிப்படையில் தேவைப்படும் நிதியினை மானியமாக வழங்கக்கோரி நிதி வசதிமிக்க திருக்கோயில்களின் நிர்வாகிகளுக்கு எழுத்துபூர்வமாக மனு அளிக்க வேண்டும். நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதியின் அடிப்படையில் விதிகளைப் பின்பற்றி திருப்பணி வேலைகள் தொடங்கப்பட வேண்டும் என அனைத்து சார்பு  நிலை அலுவலர்களுக்கும், திருக்கோயில் நிர்வாகிகளுக்கும் இந்த அறிக்கையை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Charitable Department , Measures to subsidize the surplus funds of large temples for the restoration of small temples: Charitable Department Information
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...