முத்துப்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத கல்வி அலுவலக கட்டிடம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கோவிலூர் பைபாஸ் சாலைக்கு முன்பு சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை அரசு மீட்டு உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் புதியதாக கட்டி திறக்கப்பட்டது. போதுமான அலுவலர்களுடன் இயங்கி வந்தது. கடந்த 2009ம் ஆண்டு முத்துப்பேட்டை பகுதியில் ஏற்பட்ட கடும்மழை மற்றும் வெள்ளத்தில் இந்த உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் வெள்ளநீர் புகுந்து அங்கிருந்த அனைத்து ஆவணங்களும் முற்றிலும் சேதமானது. மேலும் கட்டிடமும் சேதமானது.

அதையடுத்து வந்த நாட்களில் தனியார் ஒருவர் தானமாக வழங்கிய முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் காவல் நிலையம் எதிரில் உள்ள புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் உதவி தொடக்கல்வி அலுவலர் அலுவலகம் மாற்றப்பட்டு இன்று வரை இயங்கி வருகிறது. இதனால் பயன்பாடு இல்லாத கல்வி அலுவலர் அலுவலக கட்டிடம் முழுமைக்கும் கருவை காடுகளாக மாறிவிட்டது. இதனால் விஷஜந்துக்கள் தங்கும் ஒரு பகுதியாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது.

இதனால் அருகில் குடியிருக்கும் மக்கள் அச்சத்துடன் குடியிருந்து வருவதாக தெரிவிக்கின்றனர். இதன் அருகே அரசு பெண்கள் பள்ளியின் தங்கும் விடுதியும் உள்ளதால் மாணவிகள் இரவில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். எனவே பயன்பாட்டில் இல்லாத உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலக கட்டிடத்தை இடித்து சீரமைத்து மீண்டும் இந்த கட்டிடத்தில் அலுவலகம் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது இந்த கட்டிடத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: