கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதி ஜல்லிக்கட்டில் சீறி பாய்ந்த 700 காளைகள்

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே சங்கம்விடுதியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் சங்கம்விடுதியில் நொண்டி முனீஸ்வரர் கோயில் திருவிழாவையொட்டி நேற்று கோயில் திடலில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. திருச்சி, தஞ்சை, சிவகங்கை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 275 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். காளைகள் மற்றும் வீரர்களுக்கு தலைமை மருத்துவர் மணிமாறன் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

ஜல்லிக்கட்டு காலை 8.30 மணிக்கு துவங்கியது. கோட்டாட்சியர் கருணாகரன் துவக்கி வைத்து உறுதிமொழி வாசிக்க வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் மற்ற காளைகள் அடுத்தடுத்து விடப்பட்டன. வாடிவாசல் வெளியே சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் வெற்றி பெற்ற வீரர்கள், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், மிக்ஸி, கிரைண்டர், குக்கர்,சில்வர் பாத்திரங்கள், ரொக்கப்பரிசு உட்பட பல பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஒரு மாட்டின் உரிமையாளர் தனது மாட்டை பிடிக்கும் வீரருக்கு ரூபாய் ஒரு லட்சம் வழங்குவதாக அறிவித்து இருந்தார். ஆனால் அந்த காளை வீரர்களுக்கு போக்குக் காட்டி சென்றுவிட்டது.

இந்த விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா, கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை, புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், ஒன்றியக்குழு தலைவர் கார்த்திக் (எ) ரத்தினவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழய்யா, மாவட்ட கவுன்சிலர் ஸ்டாலின், நகர செயலாளர் ராஜா, ஜானகிராமன், பாலகுமார், அர்ஜுனன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் 40 வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Related Stories: