இஸ்லாமிய பேரரசுகள், உருது கவிதைகள் நீக்கம்: சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் அதிரடி

புதுடெல்லி: ஆப்ரிக்கா-ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, பிரபல உருது கவிஞர் பைஸ் அகமது பைஸின் கவிதைகள் உள்பட பல பாடங்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் இருந்து  நீக்கப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு  சிபிஎஸ்இ 10ம் வகுப்புப் பாடத் திட்டத்தில், ஜனநாயகம், பன்முகத்தன்மை போன்ற பாடப் பிரிவுகளும்ம், 11-ம் வகுப்பில் கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற பாடப்பிரிவுகளும் நீக்கப்பட்டன. இதற்கு நாடு முழுவதும்   கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், கடந்தாண்டு அந்த பாடங்கள் மீண்டும் சேர்க்கப்பட்டன.

இந்நிலையில்,  10, 11, 12 ம் வகுப்புகளின் வரலாறு, அரசியல் அறிவியல்  பாடத்திட்டங்களில் இருந்து பல ஆண்டுகளாக கற்பிக்கப்பட்டு வந்த சில  பாடத் திட்டங்களை தற்போது சிபிஎஸ்இ நீக்கியுள்ளது. 10ம் வகுப்பில் ‘மதம், வகுப்பு வாதம் மற்றும் அரசியல் - வகுப்பு வாதம், மதச்சார்பற்ற அரசு’ பகுதியில், பைஸ் அகமது பைஸின் உருது மொழியில் கவிதைகளின் மொழி பெயர்க்கப்பட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. 11ம் வகுப்பு வரலாறு பிரிவில் ஆப்ரிக்கா , மத்திய ஆசியாவில் இஸ்லாமிய பேரரசுகளின் எழுச்சி, 12ம் வகுப்பில் முகலாயர் காலத்து நீதிமன்றங்கள் குறித்த பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. மேலும், ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை, அணி சேரா இயக்கம், பனிப்போர் காலம், தொழில் புரட்சி குறித்த பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்து சிபிஎஸ்இ  அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த மாற்றங்கள் பாடத் திட்டங்கள் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் (என்சிஇஆர்டி) பரிந்துரைகளின்படி இவை நீக்கப்பட்டுள்ளன,’ என்றனர்.

Related Stories: